Home நாடு கல்வி அமைச்சின் பாரபட்சம்: அனைத்து பள்ளிகளுக்கும் மலாய்  நாளிதழ்கள்! தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் நாளிதழ்கள் ஏன்...

கல்வி அமைச்சின் பாரபட்சம்: அனைத்து பள்ளிகளுக்கும் மலாய்  நாளிதழ்கள்! தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் நாளிதழ்கள் ஏன் கூடாது?

304
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாட்டில் வெளியாகும் மூன்று மலாய் தேசிய நாளிதழ்களையும் தீபகற்ப மலேசியாவில் உள்ள எல்லா பள்ளிகளும் சந்தா கட்டி தினமும் வாங்க வேண்டும் என கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மொழியான மலாய் மொழியில் மாணவர்கள் புலமையும் திறமையும் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

பெரித்தா ஹாரியான், உத்துசான் மலேசியா, சினார் மலேசியா ஆகிய மூன்று மலாய் நாளிதழ்களும் இந்தத் திட்டத்திற்காக வாங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு பெயர் குறிப்பிட்டுள்ளது. பள்ளிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு இந்த பத்திரிகைகளை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே மலாய் மொழித் திறனும் ஆற்றலும் மேலும் வளரும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

#TamilSchoolmychoice

கல்வி அமைச்சின் இந்த முடிவு பாரபட்சமான ஒரு முடிவாகும் எனப் பரவலாகக் கருதப்படுகிறது.

காரணம் தேசிய மொழியை வளர்ப்பதற்கு பல்வேறு வழி வகைகள் இருக்கின்றன. ஏற்கனவே கல்வி அமைச்சிலும் பல பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

நாளிதழ்களை வாங்குவதால் மட்டும் – அதனை படிப்பதால் மட்டும் – மாணவர்களின் மலாய் மொழி ஆற்றல் வளர்ந்து விட முடியும் எனக் கூற முடியாது. காரணம் ஒரு பள்ளிக்கென எத்தனை நாளிதழ்கள் வாங்க முடியும்? அவற்றை எல்லா மாணவர்களும் படிக்க முடியுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

அதே வேளையில் தமிழ் பள்ளிகளிலும் தமிழ் மொழி ஆற்றலும் திறமையும் மாணவர்களிடையே பெருமளவில் வளர்ந்திருப்பதாக கூற முடியாது.  மலாய் மொழித் திறனை வளர்க்க மலாய் நாளிதழ்களால் முடியும் என்றால், அதே போல, தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி ஆற்றலை வளர்க்க தமிழ் நாளிதழ்களை வாங்குவதும் ஒரு பொருத்தமான முடிவாகவே இருக்கும்.

இதேபோன்று சீனப் பள்ளிகளிலும் சீன நாளிதழ்கள் வாங்குவதும் பொருத்தமாக இருக்கும்.

எனவே தேசிய பள்ளிகளில் மட்டும் மலாய் நாளிதழ்களை வாங்குவது என்பது கல்வி அமைச்சு பாரபட்சமாக எடுத்திருக்கும் ஒரு முடிவாகவே கருதப்படுகிறது.

அதே வேளையில் தேசிய மொழியின் திறனை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்றால் அது சபா, சரவாக் மாநிலங்களுக்கும் பொருந்தாதா?

ஏன் அந்த மாநிலங்களில் மட்டும் இந்தத் திட்டங்கள் விரிவாக்கப்படவில்லை? ஏன் மேற்கு மலேசியாவில் மட்டும் இந்தத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

சபா, சரவாக் மாநிலங்களில் வெளிவரும் மலாய் நாளிதழ்களும் இவ்வாறு அங்குள்ள தேசியப் பள்ளிகளுக்கு வழங்கப்படலாம். ஏன் அதனை அங்கு செய்யாமல் மேற்கு மலேசியாவில் மட்டும் இந்த திட்டம் அமலாக்கம் காண்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

மாணவர்கள் தேசிய மொழியில் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மேற்கு மலேசியாவில் உள்ள பள்ளிகளுக்கும் மட்டும் உரியதா? ஏன் சபா, சரவாக் மாநிலத்திலுள்ள மாணவர்கள் மலாய் மொழியில் தங்களின் திறனை நாளிதழ்கள் வாங்கி வளர்த்துக் கொள்ளக் கூடாதா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால் மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை வளர்க்க வேண்டும் என்பது அரசாங்கம் அடிக்கடி வலியுறுத்தும் திட்டங்களில் ஒன்றாகும். எனவே, ஆங்கில மொழி நாளிதழ்களை பள்ளிகளுக்கு வாங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஏன் அமுல்படுத்தவில்லை?