Home நாடு “நாங்கள் இறுதிவரை போராடி நீதியை நிலைநாட்டுவோம்!”- புகார்தாரர்கள் கூட்டறிக்கை

“நாங்கள் இறுதிவரை போராடி நீதியை நிலைநாட்டுவோம்!”- புகார்தாரர்கள் கூட்டறிக்கை

725
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 26 – நாளை மஇகா-சங்கப் பதிவிலாகா வழக்கு விசாரணை நிறைவு காணும் என்றும், இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த விவகாரத்தை முதன் முதலில் சங்கப் பதிவிலாகாவில் புகார் செய்த புகார்தாரர்கள் “நாங்கள் இறுதிவரை போராடி நீதியை நிலைநாட்டுவோம்” என கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.

டத்தோ ஜஸ்பால் சிங்

Jaspal-440-x-215“2013ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகளின் காரணமாக இன்றைக்கு நமது கட்சி விவகாரம் நீதிமன்றத்தின் வாசலில் வந்து நிற்கும் அவல நிலை கண்டு நாங்கள் வருத்தம் அடைந்தாலும், எதிர்வரும் மே 27ஆம் தேதியோடு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றும், அன்றைய தினமே நீதிபதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கி விடுவார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளரும், தேர்தல் முறைகேடுகள் குறித்து சங்கப் பதிவிலாகாவில் புகார் சமர்ப்பித்தவர்களில் ஒருவருமான டத்தோ ஜஸ்பால் சிங் (படம்) தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“எங்களின் நோக்கம் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதல்ல. மாறாக, நீதியை நிலை நாட்டுவதற்காகத்தான் நாங்கள் இந்த விவகாரத்தை முதலில் மஇகா மத்திய செயலவையின் பார்வைக்குக் கொண்டு வந்தோம். சம்பந்தப்பட்ட தேர்தலில் வென்றவர்களே மத்திய செயலவையில் இடம் பெற்றிருப்பதால், ஒரு தனியான, சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்து எங்களின் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் எங்களின் புகார்களை மத்திய செயலவை விசாரிக்கவும் இல்லை. எங்களை அழைத்து விளக்கம் கேட்கவும் இல்லை. எந்த மத்திய செயலவை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நாங்கள் புகார் கொடுத்தோமோ அந்த மத்திய செயலவையே, எங்களின் புகார்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டது. மஇகா தேர்தல்கள் எந்தவித முறைகேடுகளும் இன்றி தூய்மையாக நடந்தன என்று மஇகா தேர்தல் குழு கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய செயலவை தெரிவித்தது” என்று ஜஸ்பால் சிங் மேலும் விளக்கினார்.

டத்தோ டி.மோகன்

“தேசியத் தலைவர் பழனிவேல்தான் எங்களிடம் நீங்கள் வேண்டுமானால்  சங்கப் பதிவிலாகா சென்று புகார்செய்யுங்கள் என்று கூறினார்” என மற்றொரு புகார்தாரரான டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

T.mohan“சிறிய குறைபாடுகள் என்றிருந்தால் நாங்களும் போகட்டும் என்று விட்டிருப்போம். ஆனால் நடந்திருந்த முறைகேடுகள் கட்சியின் மீது அக்கறை கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மாபெரும் தவறுகளாக இருந்தன. வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலான வாக்குச் சீட்டுகள், திவால் ஆனவர்கள் ஓட்டுப் போட்டது, சட்டப்படி வாக்களிக்க வேண்டிய மஇகா புத்ரி பிரிவினருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படாதது, சட்டவிரோதக் கிளைகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது, இப்படியாக எண்ணிலடங்காத முறைகேடுகள் நடைபெற்றிருந்தன. உதவித் தலைவர் தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்ட வாக்குகளை ஒப்பீட்டு சரிபார்க்கும் பட்டியலின் அசல் பிரதியை தேர்தல் குழு மறைத்துவிட்டது” என்றும் டி.மோகன் மேலும் கூறினார்.

“அந்த தேசிய உதவித் தலைவர் வேட்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்ட வாக்குகள் ஒப்பிட்டு சரிபார்க்கும் பட்டியலின் அசல் பிரதியை ஏன் மஇகா தலைமையகத்தால் வெளியிட முடியவில்லை?” என்றும் டி.மோகன் கேள்வி எழுப்பினார்.

நீதியை நிலைநாட்டவே இந்தப் போராட்டம் – சொந்த நலனுக்காக அல்ல!

“நாங்கள் நீதியை நிலைநாட்டத்தான் போராடிக் கொண்டிருக்கிறோமே தவிர, எங்களின் சொந்த நலனுக்காக அல்ல. மஇகாவின் ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டத்தின் தலையாய நோக்கமாகும். நாங்கள் கேட்பதெல்லாம், வெளிப்படையான, நியாயமான மறுதேர்தலைத்தான். வாக்களிக்கும் பேராளர்கள் அச்சமின்றி வாக்களிக்க, எந்தவித நெருக்குதலும், பயமுறுத்தலும் இல்லாத சூழ்நிலை வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. நாங்கள் எங்களுக்கென எந்தவித பதவிகளையும் கேட்கவில்லை. மாறாக, நாங்கள் கேட்பதெல்லாம், நமது கட்சியை வழிநடத்த வேண்டியவர்கள் யார் என்பதை நிர்ணயிக்க அடிமட்ட வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். நடந்து முடிந்த மஇகா தேர்தலில் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகிவிட்ட எண்ணிலடங்காத இத்தனை முறைகேடுகளை வைத்துப் பார்க்கும்போது நாங்கள் கேட்பதில் என தவறு இருக்க முடியும்?” என்றும் புகார்தாரர்களில் ஒருவரான டத்தோ ஜஸ்பால் சிங் கூறினார்.

“பழனிவேல்தான் நீதிமன்றம் கொண்டு சென்றார்” – டத்தோ முனியாண்டி

மற்றொரு புகார்தாரரான டத்தோ என்.முனியாண்டி கூறுகையில் “இந்த விவகாரத்தை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. மாறாக, பழனிவேல்தான் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார். ஏன் அவ்வாறு கொண்டு சென்றார்? சங்கப் பதிவிலாகாவின் சட்டங்களை நுணுக்கி, நுணுக்கி ஆராய்ந்து, இப்போது திடீரென தானும், மத்திய செயலவையும் செய்த முடிவுகளை சங்கப் பதிவகம் என்ற மூன்றாம் தரப்பு மாற்றக் கூடாது, எதிர்க்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் செல்கின்றார் பழனிவேல்? நடந்த தேர்தல் முறைகேடுகளுக்கு முறையான பதில்தான் என்ன? எது வேண்டுமானாலும் செய்து கொண்டு, தானும் தனது குழுவினரும் தாங்கள் விரும்பும்வரை எப்போதும் அதிகாரத்தில் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் பழனிவேலுவின் ஆசையா?” என்று கேள்விகள் எழுப்பினார்.

Muniandy Ampang“நாங்கள் புகார்களை சமர்ப்பித்தபோது சர்ச்சைக்குரிய பதவிகளுக்கு மட்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நீதியை நிலைநாட்டும் கோரிக்கையாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக, எங்களுக்கே ஆச்சரியம் தரும் விதமாக, பழனிவேல் தனது போக்கை மாற்றிக் கொண்டு எல்லா பதவிகளுக்கும் மறு தேர்தல் என்று அறிவித்தார்” என்றும் டத்தோ முனியாண்டி (படம்) தெரிவித்தார்.

“பதிவை ரத்தாக்காத சங்கப் பதிவிலாகாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்”-மது மாரிமுத்து

Madhu Marimuthu“இந்த விவகாரத்தை மேலும் மோசமாக்கும் விதமாக, உள்துறை அமைச்சரே கூறியதுபோல், மஇகாவில் சட்டவிரோதக் கிளைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவும் ஒரு கடுமையான குற்றமாகும். சங்கங்களின் சட்டம் 41வது  பிரிவின்படி ஓர் அரசியல் கட்சியிலோ, சங்கத்திலோ, சட்டவிரோதக் கிளைகள் அமைக்கப்பட்டிருந்தால், அந்த அமைப்பின் பதிவே ரத்தாகலாம். ஆனால், அவ்வாறு கட்சியை ரத்து செய்யும் முடிவை மேற்கொள்ளாமல், நிலைமையை சரிசெய்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பையும், அவகாசத்தையும் சங்கப் பதிவிலாகா வழங்கியிருந்தனர். இதற்காக நாம் சங்கப் பதிவிலாகாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். சங்கப் பதிவிலாகா சட்டம் பிரிவு 3ஏ படி, நமக்கு வாய்ப்பளித்த சங்கப் பதிவிலாகாவிற்கு எதிராக பழனிவேலுவின் வழக்கறிஞர்கள் எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதைப் பார்க்கும்போது, கட்சியை அவர்கள் பதிவு ரத்து செய்திருந்தாலே நன்றாக இருந்திருக்குமோ என நினைக்கத் தோன்றுகின்றது” புகார்தாரர்களில் ஒருவரான மது மாரிமுத்து (படம்) வருத்தமுடன் கருத்து தெரிவித்தார்.

“தாய்க் கட்சிக்கு அழிவு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்” – டத்தோ ஆர்.எஸ்.மணியம்

Madhu Marimuthu“பழனிவேல் நீதிமன்றத்தை நாடியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததையும், சட்டவிரோதக் கிளைகள் அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் மறுக்கின்றார் என்பது தெரிகின்றது. இது போன்ற ஒரு முக்கிய நீதிமன்ற வழக்கைத் தொடுப்பதற்கு முன்னால் கிளைத் தலைவர்களிடமோ, தொகுதித் தலைவர்களிடமோ அல்லது மத்திய செயலவையிடமோ முன் அனுமதியைப் பெற்றாரா? நாம் ஏன் இந்த இக்கட்டான நிலையில் இன்றைக்கு இருக்கின்றோம் என்பதை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும். அதற்கான விடை மிகவும் எளிதான ஒன்று. 2013இல் நடந்த தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகள், சட்டவிரோதக் கிளைகள் பங்கெடுப்பு இவைதான் நம்மை இந்த இக்கட்டான நிலைமைக்கு இன்று இட்டுச் சென்றிருக்கின்றன. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பழனிவேலுவுக்கு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அவரது பலவீனமான தலைமைத்துவம், எண்ணற்ற தலைகீழ் பல்டிகள், அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்ளும் போக்கு, இவற்றால், கட்சியை ஒர் இருண்ட பாதைக்குள் அவர் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருக்கப் போகின்றோமா? ஒரு பலவீனமான தலைவர் நமது கண் முன்னேயே நமது பாரம்பரியமிக்கக் கட்சியை அழிப்பதை பார்த்துக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல் சும்மா இருக்கப் போகிறோமா? நமது தாய்க் கட்சிக்கு அழிவு ஏற்பட்டால், நாமெல்லாம் அரசியல் அனாதைகளாகி விடுவோம். அதே வேளையில் மலேசிய இந்தியர்களும் பாதுகாப்பற்றவர்களாக, உதவிகள் ஏதும் பெற முடியாதவர்களாக, நிர்க்கதியான நிலைமைக்கு ஆளாகி விடுவார்கள். எதிர்வரும் புதன்கிழமை வெளிவரவிருக்கும் தீர்ப்பு எதுவாக இருப்பினும், நமது மஇகாவில் ஜனநாயகம்  மலரச்செய்யவும், நீதியும் நியாயமும் அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்க வேண்டியதை உறுதி செய்யவும் புகார்தாரர்களாகிய நாங்கள் தொடர்ந்து எங்களின் போராட்டப் பயணத்தைத் தொடருவோம் நீதியை நிலைநாட்டுவோம் என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என  மற்றொரு புகார்தாரரான டத்தோ ஆர்.எஸ்.மணியம் (படம்) தெரிவித்தார்