புதுடில்லி, ஜூன் 5- முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி கோரி கேரள அரசு கடந்த மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காகச் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இதில் கேரள அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஆலோசைக் கூட்டம் முடிந்தவுடன், புதிய அணை கட்டுவதால் உண்டாகும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதாகக் கேரளத் தகவல் தொடர்பு ஊடகங்களில் செய்தி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்துச் சுற்றுச் சூழல் அமைச்சகம் கூறியிருப்பதாவது:
“கேரள ஊடகங்களில் பரவும் செய்தி அதிகாரப்பூர்வமானதல்ல. திருவனந்தபுரம் அருகே உள்ள அருவிக்கரா சட்டசபைத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் சமயம் என்றாலே இது போன்ற செய்திகளைக் கேரள ஊடகங்கள் கிளப்பிப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அதுதான் இப்போதும் நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாகக் கிடத்த தகவலின்படி, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.