கோத்தா கினபாலு, ஜூன் 5 – சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில், கோத்தா கினபாலுவில் மலையேற்றத்தி ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
நிலநடுக்கத்தில் பாறைகள் உருண்டு அவர்களின் மீது விழுந்திருக்கலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன.
சம்மிட் என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தற்போது அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும், தேடுதல் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, ஹெலிகாப்டர் மூலமாகவும் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.
இன்று காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் போது பெரும்பாலானவர்கள் 4,095 மீட்டர் உயரமுள்ள மலை உச்சியை அடைந்து விட்டு இறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
5.9 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முதற்கட்ட தகவல் அளித்துள்ளது.