டாக்கா, ஜூன் 8-ரோஹிங்கியா மக்களைக் கடத்திய குற்றவாளிகளில் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக வங்கதேசக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள வங்கதேச நிலப்பரப்பான டெக்னாப்பில் இரு கடத்தல் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அமானுல்லா எனும் அந்த நபர் மீது, ஏற்கனவே 3 மனிதக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் அப்பகுதி முகாமில் தங்கியுள்ள அகதிகள், முகாமில் வசித்து வந்த அமானுல்லாவை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.
இப்பகுதியில் உள்ள இரு முகாம்களில் பதிவு செய்யப்பட்ட 32000 ரோஹிங்கியா அகதிகள் தவிர, அந்நாட்டில் மொத்தம் 2 லட்சம் முதல் 3 லட்சம் அகதிகள் வரை வசித்து வருகின்றனர் என்பதாகப் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.