லண்டன், ஜூன் 11 – உலகின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான எச்எஸ்பிசி வங்கி, பொருளாதாரs சரிவு காரணமாகச் சுமார் 50000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தப் பணி நீக்கம் மொத்தமாக இல்லாமல் 2017-ம் ஆண்டிற்குள் முழுவதுமாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியா, ஐரோப்பா என உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள மிகப் பெரிய வங்கியான எச்எஸ்பிசி, கடந்த இரண்டு வருட காலமாகக் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் பெரிய அளவிலான வர்த்தகத்தைத் தந்த பிரேசில் போன்ற நாடுகளிலும் வர்த்தகச் சரிவைச் சந்தித்துள்ளது. அதன் காரணமாகவே இந்த ஊழியர்கள் பணி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழியர்களின் பணி நீக்கம் பிரேசில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் அதிகபட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசிலில் 25000 ஊழியர்களும், துருக்கியில் 22000 முதல் 28000 ஊழியர்களும் தங்கள் வேலை வாய்ப்பினை இழக்கம் நேரிடும் என அந்த வங்கியின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஊழியர்களின் பணி நீக்கம் தொடர்பாக எச்எஸ்பிசியின் தலைமையகம் இதுவரை வெளிப்படையான அறிவிப்பினை வெளியிடவில்லை என்றாலும், “ஊழியர்கள் பணி நீக்கம் என்பது அவ்வப்போது நிகழும் ஒன்று தான். சரிவுகளைச் சந்தித்து வரும் வேளையில் ஒவ்வொரு நிறுவனங்களும் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துத் தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
அதேபோல் சுமார் 2.6 ட்ரில்லியன் டாலர்களில் இருக்கும் தனது உலக அளவிலான வங்கிச் சேவைகளையும், சந்தைப் பிரிவுகளையும் அதிரடியாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக, மூன்றில் ஒரு பங்கு, எச்எஸ்பிசியின் உலக அளவிலான வங்கிச் சேவைப் பிரிவுகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்.