உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்எஸ்பிசி, வாடிக்கையாளர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவி செய்துள்ளதற்கான ஆதாரங்கள், ஜெனீவாவில் அந்த வங்கியில் வேலைபார்த்த கணினி நிபுணர் ஒருவரால் அம்பலமாகி உள்ளது. 2007-ம் ஆண்டு அவர் அம்பலப்படுத்திய தரவுகளில் இருந்து தற்போது பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த தகவல்களின் அடிப்படையில் தனிநபர்கள் ரகசியக் கணக்குகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கும் எச்எஸ்பிசி-யின் சுவிஸ் கிளை, வாடிக்கையாளர்களுக்கு, அரசாங்க வரித்துறைக்கு தெரியாமல் பணத்தை கொண்டு வந்து சேர்க்கும் பல்வேறு வழிகள் பற்றி ஆலோசனைகளையும் வழங்கி உள்ளது.
இது பற்றி எச்எஸ்பிசி கூறியதாவது:-
“வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்டு அரசிற்கு தெரியாமல் பணம் பதுக்கி வைக்கக் கூடிய கணக்குகளும் நடைமுறைகளும் எங்கள் வங்கியில் இருந்தன. ஆனால் அவ்வகையான வங்கிக் கணக்குகளின் விதிமுறைகளை நாங்கள் முற்றாக மாற்றிவிட்டோம். அவற்றின் வழியாக யாரும் வரி ஏய்ப்பு செய்ய இனி வாய்ப்பு இல்லை” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்எஸ்பிசி வங்கியின் புதுபட்டியலில், 1,195 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 100 பேரின் பெயர்களும், பதுக்கிய தொகை பற்றிய விவரங்களும் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி இப்பட்டியலில் முக்கிய தொழிலதிபர்களான ரிலையன்ஸின் அம்பானி சகோதரர்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனரான நரேஷ் கோயல், மேத்தா ரிஹன் ஹர்ஷத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம் அர்ஜெண்டினா போன்ற நாடுகள் வரி ஏய்ப்பு செய்ய எச்எஸ்பிசி உதவியதால், அந்த வங்கிக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை நடத்த முடிவு செய்துள்ளன.