புத்ராஜெயா, பிப்ரவரி 10 – நாடே பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் மீதான ஓரினச் சேர்க்கை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதையடுத்து நீதிமன்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு காவல்துறையினர் தீவிர சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை சுமார் 8 மணி முதற்கொண்டே ஏராளமான ஊடகவியலாளர்கள் குவியத் தொடங்கினர். இதேபோல் அன்வாரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் நீதிமன்றம் நோக்கிப் படையெடுத்தனர்.
முன்னதாக காலை 5.50 மணி முதலே நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தடுப்பரண்களை அமைத்தனர்.
காலை 9.05 மணியளவில் அன்வார் இப்ராகிம் நீதிமன்றம் வந்தடைந்தார். பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று காலை (இன்னும் சற்று நேரத்தில்) அன்வார் மீதான வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளது.