குறிப்பாக ‘மெக் டொனால்ட்’ (McDonald), ‘டாமினோஸ்’ (Domino) போன்ற நிறுவனங்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருந்து வந்தது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கண்கவரும் உணவுப் பண்டங்கள், உடனடியான நேரடி விநியோகம் இவையே மேற்கூறிய நிறுவனங்கள் இந்தியாவில் ஜொலிக்க முக்கிய காரணம்.
இந்நிலையில், 2013-2014-ம் ஆண்டில் வெளிநாட்டு உணவு நிறுவனங்களை விட இந்திய நிறுவனம் ஒன்று பன்மடங்கு அதிக வருவாயை பெற்றுள்ளது. அந்த நிறுவனம் தான் ஹால்திராம். கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் மிகப் பிரபலமடைந்துள்ளது.
இந்தியாவில் இனிப்புகளுக்கு பெயர் பெற்ற அகர்வால் நிறுவனங்களில் ஒன்றான ஹால்திராமின் ஆரம்பக் காலங்கள், வியக்கத் தக்க வகையில் உள்ளது. சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டு, இன்று பல்லாயிரம் கோடிகள் மதிப்புடைய நிறுவனமாக ஹால்திராம் வளர்ந்து நிற்பதற்கான வெற்றி குறிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாறு.
2013-2014-ம் நிதியாண்டில் மட்டும் ஹால்திராமின் வருவாய், மெக் டொனால்ட் மற்றும் டாமினோஸ் நிறுவனங்களின் வருவாயை விட அதிகம். அந்த ஆண்டில் மெக் டொனால்ட் 1,390 கோடி ரூபாயும், டாமினோஸ் 1,733 கோடி ரூபாயும் வருவாயாக ஈட்டி உள்ளன. ஆனால், ஹால்திராமின் வருவாய் ஏறத்தாழ 3500 கோடி ரூபாய். இது ‘மேகி’ (Maggi) தயாரிப்புகளின் வருவாயை விட சுமார் மூன்று மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டில் மட்டும், இந்திய உணவுப் பண்டங்களின் மொத்த வருவாயில், 40 சதவீதம் அளவிற்கு ஹால்திராம் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் சுவை மாறாமல், உயர் ரக தரத்துடன் உருவாக்கப்படுவதே ஹால்திராமின் வெற்றி இரகசியம்.
ஹால்திராம் பற்றி அந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர் கமல் அகர்வால் கூறுகையில், “இந்த தொழிலை எங்களின் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நாங்கள் அதிக முயற்சிகளை எடுத்து வருகிறோம். உணவுப் பொருட்களை எங்கள் வீடுகளிலேயே தயாரிப்பது தான் எங்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். அதுவே புதிய முயற்சிகளுக்கு வித்திடுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.