சென்னை, ஜூன் 10- நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்குக் கூழைக் கும்பிடு போடும் கூடமாக மாறிவிட்டது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், செயலாளர் ராதாரவியும் இணைந்து, நடிகர் சங்கத்தை அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் சங்கம் போலவே மாற்றிவிட்டனர்.
இது குறித்துச் சங்கப் பொருளாளராக இருக்கும் வாகை சந்திரசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுருப்பதாவது:
“ஒவ்வொரு நடிகருக்கும் நடிகர் சங்கம் தாய் வீடு. அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. நடிகருக்கு அரசியல் என்பது அவருடைய சுதந்திரம்.
நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் அரசின் ஆதரவு தேவை. அரசிடம் தங்கள் தேவைகளைக் கேட்க உரிமை உண்டு. ஆனால் இந்த அமைப்புக்குள் அரசியலை நுழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
சங்கத்தின் தலைவரான சரத்குமார், ஜெயலலிதாவின் அரசியலைப் புகழ்ந்து தள்ளினார்; துதி பாடினார்; அதோடு நிற்கவில்லை. சட்டப்பேரவையிலும் பொதுக்கூட்டங்களிலும் கருணாநிதியைத் தாக்கிப் பேசினார்.
இதுகுறித்துச் சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற போது பலமுறை அவரிடம் கூறினேன்.அவ்ர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
கருணாநிதிக்குக் கலை உலகின் மேல் கனிவான பார்வை உண்டு.துரோகம் செய்பவர்களை மறப்போம் மன்னிப்போம் என்று ஏற்றுக் கொள்வார்.
சரத்குமாரைப் பல மாநாடுகளில் பேச வைத்து அழகு பார்த்தவர்; ராஜ்யசபா எம்பி ஆக்கிப் பெருமைப்படுத்தியவர் கலைஞர். அதையெல்லாம் மறந்து விட்டார் சரத்குமார்.
நான் கருணாநிதியிடம் வைத்திருக்கும் அன்பு, பாசம், விசுவாசம் இவற்றைச் சீண்டிப்பார்க்கும் எவரோடும் என் பயணம் இருக்காது. எனவே நடைபெற இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, ராதாரவியைத் தன் பக்கம் இழுக்க கருணாநிதி முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், சந்திரசேகரும் அந்த அணியிலிருந்து விலகியிருப்பது, சரத்குமாருக்குப் பின்னடைவையே காட்டுகிறது.