சென்னை,ஜூன் 19- சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அ.தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தவிர, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். மேலும், சுயேச்சையாகச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் 50 பேர் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. வேட்பாளரான ஜெயலலிதா 21-ந்தேதி பிரசாரம் செய்வார் என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. தற்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22- ந் தேதி திங்கட்கிழமையன்று ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கான பிரத்யேகப் பிரசார வாகனத்தில் இருந்தபடியே அவர்
திருவொற்றியூர் நெடுஞ்சாலைச் சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலைச் சந்திப்பு ஆகிய 2 இடங்களில் மட்டுமே வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.