புதுடெல்லி, ஜூன் 19- டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா,டெல்லியின் வடகிழக்கு மாவட்டமான காஜூரி காஸ் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது மகிழுந்து (கார்) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிவேகமாகச் சென்றதைப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் கண்டார்.
உடனடியாக அவர், அடுத்த சந்திப்பில் நின்ற போக்குவரத்துக் காவலருக்கு மகிழுந்து அதிவேகமாக வரும் தகவலைத் தெரியப்படுத்தினார்.
உடனே அதிவேகமாக வந்த மகிழுந்தை மடக்கினார் அந்தக் காவலர். அது துணை முதலமைச்சருடைய மகிழுந்து என்பது தெரிந்தது. ஆனாலும், அதிவேகமாக மகிழுந்தை ஓட்டியதற்காகத் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் ஓட்டுநருக்கு ரூ 400 அபராதம் விதித்தார்.
எதற்கும் பயப்படாமல் தன் கடமையைச் செய்த அந்தக் காவலருக்கு உயர் அதிகாரிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.