திருவனந்தபுரம், ஜூன் 19- தமிழகத்தில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திக் காய்கறிகள் விளைவிக்கப்படுவதாகக் கேரள அரசு புகார் கூறியுள்ளது.
கேரள அரசு தங்கள் மாநிலத்துக்குத் தேவையான 80 சதவீதக் காய்கறிகளை அண்டை மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து ஏராளமான காய்கறிகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேகி நூடுல்ஸ் பிரச்சனையைத் தொடர்ந்து, கேரளாவில் இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் தரத்தையும் ஆய்வு செய்ய கேரள அரசு முடிவு செய்தது.
எனவே, தமிழக எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்ட வயல்வெளிகளில் கேரள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்குப் பின் அவர்கள் இதுகுறித்த முடிவைக் கேரள அரசுக்குத் தெரிவித்தனர். அதில் தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, 3 முதல் 5 மடங்கு அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த முடிவின் அடிப்படையில் கேரள அரசு தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதனால், இது தொடர்பாக இரு மாநிலச் செயலாளர்கள் இடையிலான ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகக் கேரள மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர் டி.வி.அனுபமா தெரிவித்துள்ளார்.