Home நாடு ஆடை விவகாரம்: சுங்கை பூலோ மருத்துவமனை மன்னிப்பு!

ஆடை விவகாரம்: சுங்கை பூலோ மருத்துவமனை மன்னிப்பு!

426
0
SHARE
Ad

hospitalsugaibulohகோலாலம்பூர், ஜூன் 24 – குட்டைக் கால்சட்டை அணிந்து வந்த பெண்ணுக்குச் சுங்கை பூலோ பொது மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் நுழைவதற்காக அப்பெண் தனது இடுப்பைச் சுற்றி ஒரு துண்டைக் கட்டிக்கொள்ள நேரிட்டது.

கடந்த ஜூன் 16-ம் தேதி அன்று சுங்கை பூலோ மருத்துவமனைக்கு வந்த அப்பெண் பார்வையாளர்களுக்கான நுழைவுப் பகுதியில் பாதுகாவலர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் அப்பெண்ணின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளியிடம் இருந்து துண்டு ஒன்றைப் பெற்று வந்து மகளிடம் அளித்துள்ளார்.

அதை தன் முழங்கால்களை மறைக்கும் வகையில் இடுப்பில் கட்டிக்கொண்ட பின்னரே அப்பெண் மருத்துவமனையில் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரிலேயே இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதாக மருத்துவமனைப் பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மருத்துவமனையில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பின் அருகே அப்பெண்மணி மஞ்சள் துண்டுடன் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவலாக உலா வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சுங்கை பூலோ மருத்துவமனை நிர்வாகம் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

“இச்சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருகிறோம். இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை காரணமாக மருத்துவமனைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதில்லை.எனினும் நோயாளிகளைக் காண வரும் பொதுமக்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்,” என்று சுங்கை பூலோ மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.