கோலாலம்பூர், ஜூன் 24 – பெர்லிஸ் மாநிலத்தின் வாங் கெலியான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சவக்குழிகள் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விசாரணைக்கு உதவுவதற்காக 3 ரோஹின்யா குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் 3 நாட்களுக்கு முன்னர் ஜோகூர் பாருவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தேசியக் காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.
“இம்மூவரும் வாங் கெலியான் தடுப்பு முகாமில் இருந்தவர்கள் என நம்புகிறோம். ஆனால் அதை இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும் விவரங்களை சேகரித்து வருகிறோம். உரிய விசாரணை நடத்த எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது,” என்று காலிட் அபுபாக்கர் கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் பாதிக்கப்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மனிதக் கடத்தலில் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.
“தடுப்பு முகாம்களில் என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறோம். இம்மூவரையும் விசாரித்தால் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் பல விசயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் நம்புகிறோம்,” என்று காலிட் அபு பக்கர் மேலும் தெரிவித்தார்.