கோலாலம்பூர், ஜூன் 24 – ஜோகூர் இளவரசரை விமர்சித்தது தொடர்பில் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் தனது வாக்குமூலத்தை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டதாகத் தேசியக்காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
“விசாரணை தொடர்பான ஆவணங்களை அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் மிக விரைவில் ஒப்படைப்போம். காவல்துறை உரிய வகையில் விசாரணை நடத்தும். அதற்கு முன்னதாக யாரும் ஆருடங்களில் ஈடுபட வேண்டாம்,” என புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் பேசிய அபுபாக்கர் தெரிவித்தார்.
கடந்த 5ஆம் தேதி தேசிய விவகாரங்கள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றுக்குப் பிரதமர் நஜிப் வராததை ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் விமர்சித்து இருந்தார்.
இதையடுத்து இளவரசர் அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், இல்லையேல் மற்ற அரசியல் பிரமுகர்களைப் போல் அவரும் பதிலடிகளைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் நஸ்ரி கூறியிருந்தார்.
“நீங்கள் அரசியல்வாதியாக இருக்க விரும்பினால் அவ்வாறு பேசுங்கள். இதன் மூலம் உங்களது கருத்துக்களுக்கு எங்களால் பதிலடி கொடுக்க இயலும். மாறாக ஒரு மாநிலத்தின் அரசப் பிரதிநிதியாக, முக்கியமான பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களைப் பேசத் தொடங்கும்போது, நாங்கள் பதிலடி கொடுத்தால் கோபப்படாதீர்கள்,” என நஸ்ரி கூறியதாகச் செய்தி வெளியானது.