புதுடெல்லி, ஜூன் 24 – ரூ.4 லட்சம் கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட்’ நகரங்கள், நகரங்களைப் புதுப்பித்தல், அனைவருக்கும் வீடு ஆகிய 3 பிரமாண்டத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.
கிராம மக்கள் பெரிய நகரங்களை நோக்கி இடம் பெயர்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதிலும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் கட்டப்படும் என்றும், 500 நகரங்களைப் புதுப்பிக்கும் வகையில் ‘அம்ருத்’ (அடல் புத்துயிர் அளிக்கும் திட்டம் மற்றும் நகர்ப்புற உருவாக்கம்) திட்டம் ஆகியவை தொடங்கப்படும் எனவும் மோடி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த 2 திட்டங்களும் நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் அப்போது அவர் கூறியிருந்தார். இந்த 2 புதிய திட்டங்களுடன் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் (2022) அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி 2022-ஆம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை நகர்ப்புற ஏழை மக்களுக்குக் கட்டித்தருவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்புதலை அண்மையில் மத்திய அமைச்சரவை அளித்தது.
இந்த 3 பிரமாண்டத் திட்டங்களையும் நிறைவேற்ற மொத்தம் 3 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கு மட்டும் ரூ.48 ஆயிரம் கோடியும், 500 நகரங்களை புதுப்பிக்க ரூ.50 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டுவதற்கு ரூ.3 லட்சம் கோடியும் ஒதுக்கப்படுகிறது. இந்த 3 திட்டங்களையும் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) டெல்லி விஞ்ஞான பவனில் தொடங்கிவைக்கிறார்.
அப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை ஸ்மார்ட் நகரங்கள் கட்டப்படும், இதற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு எவ்வளவு? நகரங்கள் எத்தகைய அடிப்படை வசதிகளைக் கொண்டு இருக்கவேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல் முறைகளையும் மோடி அறிவிக்கிறார்.
இந்தத் திட்டங்களின் தொடக்கவிழாவில், நகராட்சி ஆணையர்கள், செயலாளர்கள், தலைவர்கள், மேயர்கள், லாபநோக்கில்லாத அமைப்புகள், நகரப்புறங்களில் வீடுகள் கட்டும் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகள் இந்தியாவுடன் கூட்டாக இணைந்து ஸ்மார்ட் நகரங்களைக் கட்டித்தருவதற்கு அதிக ஆர்வம் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.