Home இந்தியா சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் மெட்ரோ தொடர்வண்டி ஓடும்!    

சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் மெட்ரோ தொடர்வண்டி ஓடும்!    

686
0
SHARE
Ad

metrioசென்னை, ஜூன் 24 – சென்னையில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே நடைபெற்ற மெட்ரோ தொடர்வண்டிக்கான பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. முதல்கட்டமாக இந்த இரு மார்க்கம் இடையே மெட்ரோ தொடர்வண்டிச்  சேவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிச் சேவைக்காகக் கோயம்பேட்டில்  கட்டுப்பாட்டு மையமும் (ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர்) மற்றும் மெட்ரோ  பணிமனையும் தயார் நிலையில் உள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள பணிமனை வளாகத்தில் நிர்வாகக் கட்டிடம், தொடர்வண்டிகள் நிறுத்தும் இடம், பழுதுபார்க்கும் இடம், தொடர்வண்டிகள் சுத்தம் செய்யும் இடம், உள்கட்டமைப்பு அறை, தொடர்வண்டிக்குத்  தேவையான புதிய கருவிகள் மற்றும் பொருட்கள் வைக்கும் அறை, 110 கிலோவாட் சக்தி கொண்ட துணை–மின்சார நிலையம் ஆகியவை உள்ளன.

#TamilSchoolmychoice

அத்துடன் பணியாளர்களுக்கான ஓய்வு அறை மற்றும் உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 19 மணி நேரம் மெட்ரோ தொடர்வண்டியை இயக்க அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளனர். குறிப்பாக அலுவலக நேரங்களில் 4.5 நிமிடங்களுக்கு ஒரு தொடர்வண்டியும், மற்ற நேரங்களில் 10 முதல் 15 நிமிடத்துக்கு ஒரு தொடர்வண்டியும் இயக்கப்பட உள்ளது.

மெட்ரோ தொடர்வண்டி 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருந்தாலும், தற்போது 34 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் தொடர்வண்டி இயக்கப்பட இருக்கிறது.

மேலும், மெட்ரோ தொடர்வண்டிகள் தானியங்கிக் கருவிகள் மூலம் இயங்கும் சக்தி கொண்டிருந்தாலும், முதலில் மனித சக்தியால் தொடர்வண்டியை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்குப் பிறகு படிப்படியாகத் தானியங்கிக் கருவிகள் மூலம் இயக்கப்படும்.

நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை மெட்ரோ தொடர்வண்டிச் சேவையில் தான் ஜல்லிக்கற்கள் போடாமல் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவான தொடர்வண்டியைத் தாங்கும் வகையில் ஜல்லிக்கற்களுக்குப் பதிலாக ரப்பர் புஷ்கள், கான்கிரீட் பலகைகளைப் பயன்படுத்தித்  தண்டவாளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து ஏற்படாது:

பறக்கும் பாதையிலும், சுரங்கப்பாதையிலும் தொடர்வண்டி பயணிப்பதால், எவரும் தண்டவாளம் இருக்கும் பகுதிக்குச் செல்ல முடியாது.

மேலும் தொடர்வண்டி புறப்படும் இடத்திலிருந்து சேருமிடம் வரை, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு ஒளிப்படக்கருவி மூலம் கண்காணிக்கப்படுவதால், யாராவது தண்டவாளப் பகுதிக்கு வந்தால் உடனடியாகத் தெரிந்துவிடும்.

உடனே கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அவசரக் காலப் பொத்தானை அழுத்துவதன் மூலம், அந்தப் பாதையில் செல்லும் அனைத்துத் தொடர்வண்டி இயந்திரத்திற்குச் செலுத்தப்படும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு, தொடர்வண்டி அனைத்தும் உடனடியாக நின்று விடுவதால் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.

metroகுறைந்த கட்டணம்:

டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு மெட்ரோ தொடர்வண்டிக்  கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு,  முதல் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முதல் 4 கிலோ மீட்டருக்கு ரூ.12 என்று கிலோ மீட்டருக்குத் தக்கபடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.