புதுடெல்லி – சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்ட பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2–ஆவது வழித்தடத்திலும் மெட்ரோ இரயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட பாதையில் பணிகள் நிறைவடைந்து, அந்தப்பாதையில் போக்குவரத்து நடந்து வருகிறது.
ஆலந்தூர்– விமான நிலையம் இடையே 5.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ இரயில் பாதையில் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையில் மெட்ரோ இரயில் பாதை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.3770 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் முதல்வழித்தட திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9.051 கி.மீ. பாதையும் உள்ளடங்கும் என மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.