சென்னை,ஜூன் 27- திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் டைரக்டர் விக்ரமன் தலைவராக மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.
2015-17ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன், துணைத்தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரியாக இருந்த வழக்கறிஞர் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார்.