சிரம்பான், ஜூன் 29 – மஇகா தொடர்ந்து நீண்ட காலம் குறை கூறல்களுக்கு ஆளாகக்கூடாது என்று டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். மஇகாவில் நிலவும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“கட்சிப் பதவிகளுக்கு இயன்ற விரைவில் மறு தேர்தலை நடத்துவதில் முனைப்பாக உள்ளோம். அக்டோபருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். தலைமைத்துவப் போராட்டம் காரணமாக கடந்த 18 மாதங்களாகக் கட்சி நிலைக்குத்திப் போய்விட்டது. நீண்ட காலமாக நாம் பழிக்கு ஆளாகக் கூடாது. உட்கட்சி நெருக்கடிகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும். மேலும், இத்தகைய பிரச்சினைகளால் அடுத்த பொதுத்தேர்தலில் நமக்குப் பாதிப்பு ஏற்படலாம். தற்போது அம்னோ தேர்தல் 18 மாதங்களுக்கு ஒத்திப் போடப்பட்டுள்ளது. எனவே நாம் தயாராக வேண்டும்,” என்றார் சுப்ரமணியம்.
கட்சியை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை மஇகா கிளைத் தலைவர்களும், கீழ்மட்டத் தலைவர்களும் உணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் கட்சி தனது பழையபடி நடவடிக்கைகளைத் தொடங்க இயலும் என்றார்.
“நாம் அவ்வாறு செய்யவில்லை எனில், நிச்சயம் பெரிய சிக்கல்களை எதிர்கொள்வோம். கட்சியை சகஜ நிலைக்குக் கொண்டு வருவதே மிக முக்கியம். அது எனது கடமை,” என்று டாக்டர் சுப்ரமணியம் கூறியதாகப் பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.