சென்னை, ஜூலை 2- நடிகர் ஜெயராமிற்கு நடிப்பைத் தவிர, வேறு பல துறைகளிலும் ஆர்வம் உண்டு. இவர் பல குரலில் பேசுவதில் வல்லவர்; செண்டை மேளம் வாசிப்பதிலும் திறமைசாலி.
கேரளக் கோவில் விழாக்களில் இவர் செண்டை மேளம் வாசித்துத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கு யானைகள் என்றால் கொள்ளைப் பிரியம். இதனால் அவர் வனத்துறையிடம் அனுமதி பெற்றுக் ‘கண்ணன்’ என்ற ஆண் யானையை ஆசையுடன் வளர்த்து வந்தார்.
அந்த யானை திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்துபோனது. வனத்துறையினர் அந்த யானையின் உடலைப் பெற்றுச் சென்று பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு புதைத்துவிட்டனர்.
அந்த யானையின் தந்தங்கள் வனத்துறையினர் வசம் இருந்தன. தான் பாசமாக வளர்த்த ‘கண்ணன்’ யானையின் நினைவாக, அதனுடைய தந்தங்களைத் தனது வீட்டில் வைத்திருக்க ஜெயராம் ஆசைப்பட்டார்; யானைத் தந்தங்களைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டி வனத்துறைக்குக் கடிதம் எழுதினார்.
அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வனத்துறையினர், “தந்தங்களை யாருக்கும் விற்கவோ பரிசாகவோ வழங்கவோ கூடாது” என்று எழுதி வாங்கிக்கொண்டு அந்த யானையின் தந்தங்களை அவரிடம் ஒப்படைத்தனர்.
தந்தங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயராம்,”நான் பாசமாக வளர்த்த யானையின் தந்தங்கள் எனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வனத்துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.