கோலாலம்பூர், ஜூலை 2 – எம்எச் 17 விமான விபத்து பற்றிய விசாரணையின் இறுதி ஆவணங்களை நெதர்லாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆணையம் வரும் அக்டோபர் மாதம் மலேசிய அரசிடம் அளிக்க இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மாஸ் விமானம் எம்எச் 17, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் போராளிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் ஏவுகணை வீசி வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
இது குறித்துக் கடந்த சில மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வந்த டச்சு நிறுவனம், கடந்த ஜூன் 1-ம் தேதி தனது வரைவு ஆவணங்களை விபத்தில் சம்மந்தப்பட்ட நாடுகளான மலேசியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அளித்தது. மேலும், இது தொடர்பான குறிப்பிட்ட அந்நாடுகளின் பதில்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் அந்த ஆவணங்களின் இறுதி வடிவம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் தற்போது அளித்துள்ள ஆவணங்களில், விமான விபத்திற்கான காரணம் என்ன? இதில் வேறு நாடுகளின் சதி உள்ளனவா? போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் அனைத்துலக விசாரணைக் குழுவின் இறுதி முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றித் தற்போது வரை எந்த நாடுகளும் பதில் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த விபத்திற்கு ரஷ்யா காரணமாகக் கூறப்பட்டு வரும் நிலையில், டச்சு ஆணையத்தின் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படுமா? அல்லது இந்த விபத்தில் சம்மந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் மட்டும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுமா என்பது இதுவரை இன்னும் தெளிவாகவில்லை.