Home இந்தியா மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றிப் பேச, கருணாநிதிக்கு அருகதையில்லை-ஜெயலலிதா!

மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றிப் பேச, கருணாநிதிக்கு அருகதையில்லை-ஜெயலலிதா!

479
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, ஜூலை 2- திமுக தலைவர் கருணாநிதி, மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது; ஆனால் அதிமுக அரசு அத்திட்டத்தைக் காலதாமதப்படுத்திவிட்டது என்றும், மெட்ரோ தொடர்வண்டிக்கட்டணம் மிக அதிகம் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றியோ, அதன் கட்டணம் பற்றியோ பேசுவதற்குக் கருணாநிதிக்கு எந்தவித அருகதையும் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து  ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால்:

#TamilSchoolmychoice

டெல்லி மெட்ரோ தொடர்வண்டிக் கட்டணத்தை விட, சென்னை மெட்ரோ தொடர்வண்டிக் கட்டணம் 250 சதவீத அளவு அதிகம் என்றும், தமிழக அரசும் மெட்ரோ நிறுவனமும் இணைந்து, மக்களின் செலவிடும் சக்தியை அறிந்து, மெட்ரோ தொடர்வண்டிக் கட்டணங்களைக் குறைத்து அறிவித்திட வேண்டும் என்றும் உபதேசம் வழங்கியுள்ளார் கருணாநிதி.

சென்னை மெட்ரோ தொடர்வண்டிக் கட்டணங்களை நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல. இதனை நிர்ணயிப்பது சென்னை மெட்ரோ தொடர்வண்டி நிறுவனம் தான்.

முதலில் அந்த நிறுவனம் தான் மெட்ரோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம், சட்டப்படியாக ஏற்பாடு செய்யப்படும் ஓர் அமைப்பிடம் இருக்க வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட ஒப்புதல் அளித்தவரே கருணாநிதி தான். அதனால், மெட்ரோ தொடர்வண்டிக் கட்டணங்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.

சென்னை மெட்ரோ தொடர்வண்டிக் கட்டண விகிதம், மும்பை மெட்ரோ தொடர்வண்டிக் கட்டண விகிதத்தைப் போன்றே அமைந்துள்ளது. டெல்லி மெட்ரோ  தொடர்வண்டி நிறுவனமும் தனது கட்டணத்தை விரைவில் உயர்த்த உத்தேசித்துள்ளது என்பதைக் கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உரிய அக்கறை செலுத்தாமல், நான்காண்டுகளில் 3 சதவீதப் பணிகளே முடித்த முந்தைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினும், தற்போது முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் சேவை துவக்கப்பட்டுள்ள இந்தப் புகழுக்கு, எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது; அரசியல் ஆதாயமும் தேட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தம் அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.