கோலாலம்பூர், ஜூலை 2 – பிரதமர்த் துறையின் சிறப்பு ஆலோசகராக மசீச கட்சியைச் சேர்ந்த ஹெங் சியாய் கியா நியமிக்கப்பட்டிருப்பதை ஜசெக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து ஜசெக கட்சியின் செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் (படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தேச ஒற்றுமையை நிலைநிறுத்தும் திட்டவரைவை அமல்படுத்தப் பிரதமர் துறையின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெங், அந்தப் பதவிக்கு மிகவும் தகுதியற்றவர். அண்மையில் நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில், பொருட்கள் மற்றும் சேவை வரியைக் காரணம் காட்டி இனப் பிரச்சனையை ஏற்படுத்தியவர் தான் அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிரதமர்த் துறையின் கீழ் இயங்கும் அமைச்சர் பிரிவிற்கு 5 வது சிறப்பு ஆலோசகராக மசீச மகளிர்ப் பிரிவுத் தலைவி ஹெங் சியாய் கியாவை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.