மணிலா, ஜூலை 2 – 189 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். இந்த விபத்து மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது.
கிம் நிர்வாணா என்ற அந்தப் படகு 173 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களுடன் ஆர்மாக் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுக் கேமோடீஸ் தீவு நோக்கிச் சென்றது. எனினும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து 127 பேர் மீட்கப்பட்டதாகவும், 26 பேரை இன்னும் காணவில்லை என்றும் கடலோரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அர்மான்ட் பலிலோ தெரிவித்தார். நடந்த விபத்துக்கு மனிதத் தவறு அல்லது மோசமான வானிலை ஆகியவை காரணமாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“படகின் கேப்டனும் இதர பணியாளர்களும் உடனடியாகக் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அவர்களிடம் வழக்கமான விசாரணை நடைபெறும்,” என்றார் பலிலோ.
“தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. கடலில் ஏற்பட்ட பெரிய அலைகள் காரணமாகவே படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று வட்டாரப் பொதுத் தற்காப்பு இயக்குநர் ரே கோசான் கூறினார்.
விபத்தில் இறந்த 36 பேரின் சடலங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டனர். இதற்காக 7 மீட்புப் படகுகள் பயன்படுத்தப்பட்டன.
படங்கள்: EPA