கோலாலம்பூர், ஜூலை 2- பழனிவேல் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் (செய்தியாளர்கள்) பேசிக் கொண்டிருப்பது பிரதமரிடம் அல்ல. அமைச்சரவை மாற்றம் அல்லது பழனிவேலின் நிலை குறித்துப் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும்” என ஹிஷாமுடின் தெரிவித்தார்.
மஇகாவில் கடந்த சில மாதங்களாகப் பழனிவேல் மற்றும் சுப்ரா தரப்பினரிடையே தலைமைத்துவ மோதல் நிகழ்ந்து வருகிறது.
இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நஜிப், சங்கப் பதிவகத்தின் முடிவையே தாம் ஏற்கப் போவதாகவும், அமைச்சரவையில் பழனிவேல் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்துப் பழனிவேல் வகித்து வரும் அமைச்சர் (இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்) பதவியும், எம்.பி., (கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர்) பதவியும் நீடிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.