கிள்ளான், மார்ச்.8- நேற்று பிற்பகல் 1 மணியளவில் கிள்ளான் காவல் நிலையத்திற்குச் சென்று தமக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் புகார் பற்றி தம்மை உடனடியாக விசாரிக்குமாறு காவல்துறையினரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
கடந்த 1.3.2013 தேதி அன்று, முரளி த/பெ சுப்ரமணியம் கிள்ளான் காவல் நிலையத்தில் கா.ஆறுமுகத்திற்கு எதிராக புகார் செய்து நிருபர்களிடம் செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதில் ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு, டத்தோ சரவணன் மூலம் 32 லட்சம் ரிங்கிட்டுக்கான காசோலையை வழங்கியதாகவும், அதை பெற்றுக் கொண்ட தமிழ்ப்பேரவை வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் ஆறுமுகம் அந்தப் பணத்தை என்ன செய்தார் என்பது புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
இதனைத் தொடர்ந்து, முரளி செய்துள்ள புகாரை முழுமையாக புலன் விசாரணை செய்து குற்றம் புரிந்தவர் எவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகம் காவல்துறையினரைக் கேட்டுக் கொண்டார். மேலும் புலன்விசாரணையை துரிதப்படுத்துமாறு காவல்துறையினரை வலியுறுதிய அவர், 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.