சென்னை, ஜூலை 2- கோயம்பேட்டிலிருந்து திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் நேற்று மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்தார். அப்போது தொடர்வண்டியில் பயணம் செய்த சக பயணியை அவர் கன்னத்தில் அறைந்ததாகக் காணொளிக் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வந்தது.
ஜெயலலிதா கண்டனம்:
இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்த ஸ்டாலின், அந்தத் தொடர்வண்டியில் பயணம் செய்த பயணி ஒருவரைக் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல” என்றார்.
மு.க.ஸ்டாலின் விளக்கம்:
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “நான் பயணியை ஒருபோதும் அடிக்கவில்லை. சம்பவத்தன்று தொடர்வண்டியில் மகளிர், கட்சியினர் என 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
அதனால் அந்த வாலிபரைத் தள்ளிப் போகச் சொல்லிக் கையை அசைத்தேன். அப்போது என் கைகள் அவர் கன்னத்தில் பட்டது உண்மைதான்.
ஆனால் அந்தக் காணொளியில் நான் அந்த வாலிபரை அடிப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு வெளியானது.
மெட்ரோ தொடர்வண்டித் தொடக்க விழாவுக்கு நேரில் ஜெயலலிதா செல்லவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதனைத் திசை திருப்பவே ஜெயலலிதா இப்படிக் கூறுகிறார்” என்றார் அவர்.
குஷ்பு,ஸ்டாலினுக்கு வக்காலத்து:
இந்நிலையில், இச் சம்பவம் குறித்துக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு தனியார்த் தொலைக் காட்சியில் பேசியபோது, “மெட்ரோ தொடர்வண்டிப் பயணத்தின் போது உடன் வந்த பயணியை ஸ்டாலின் அறையவில்லை. பின்னே செல்லுமாறு தள்ளித்தான் விட்டார். மு.க.ஸ்டாலினின் நற்பெயரைக் கெடுப்பதற்கான சதி இது. ஸ்டாலின் பொதுவாக இப்படி நடந்து கொள்ளமாட்டார்” என்று ஸ்டாலினை ஆதரித்துப் பேசினார்.
இதோடு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.