Home அவசியம் படிக்க வேண்டியவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மறவன்’ திரைப்படம் – ஆகஸ்டில் வெளியீடு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மறவன்’ திரைப்படம் – ஆகஸ்டில் வெளியீடு!

734
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 4 – தமிழகத்தில் தில்லாலங்கடி, வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.டி.புவனேந்திரன்.

இவர், தமிழகச் சினிமாத்துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மலேசியச் சூழலுக்கு ஏற்ப ‘மறவன்’ என்ற திரைப்படத்துடன் மலேசியக் கலைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Maravan

#TamilSchoolmychoice

இந்தத் திரைப்படத்தில், மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்களான ஹரிதாஸ், டேனிஸ்குமார், குமரேசன், கவிதா தியாகராஜன், புஸ்பா நாராயண், சங்கீதா கிருஷ்ணசாமி, சீலன் ஆகியோரை முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்துப் படத்தை உருவாக்கியுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வச் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று தலைநகர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், இணைய ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் இயக்குநர் புவனேந்திரன் பேசுகையில், “இந்தப் படத்தைக் கோல்டன் பீக்காக் நிறுவனத்தின் மூலம் சந்திரன் தயாரிக்கின்றார். தமிழகத்தின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்த ராஜ வத்சலம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதே போல் படத்தொகுப்பைத் தமிழகத்தின் முன்னணி எடிட்டர் பிரவீன் கே அவர்களின் உதவியாளர் ஆனந்த் செய்துள்ளார். இந்தக் குழுவினருடன் ஏற்கனவே எனக்கு நல்ல ஒரு புரிதல் இருந்ததால் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன் ”

10984094_690486284413575_6000553051529141854_n

(நடிகர் ஹரிதாஸ் மற்றும் நடிகை கவிதா தியாகராஜன்)

“குடும்பத்தோடு பார்க்கக்கூடிய இப்படத்தில், நகைச்சுவை, திகில் என எல்லாம் கலந்து ஒரு தென்னிந்தியப் படத்தைப் பார்க்கும் உணர்வை மலேசிய ரசிகர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் இயக்கியுள்ளேன். மலேசியாவின் முன்னணி நட்சத்திரங்களோடு சேர்ந்து நகைச்சுவைக்காக லோகன், ஷான் மனோ நாகலிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இது தவிர, கே.எஸ்.மணியம், ஏஎம்ஆர் பெருமாள், முருகேஷ், எஸ்.பரஞ்சோதி, எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட மலேசியாவின் மூத்த கலைஞர்களும் நடித்துள்ளனர்.”

“எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மெர்டேக்காவை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகின்றது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி முடிவு செய்யப்படாததால், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். முழுக்க முழுக்க மலேசியச் சூழலையும், இரப்பர் தோட்டங்களைச் சுற்றிப் பிண்ணப் பட்ட கதையம்சமும் கொண்ட இப்படம் நிச்சயம் ஒரு இரண்டு நாட்களாவது உங்களது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு புவனேந்திரன் தெரிவித்தார்.

மறவன் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஹரிதாஸ் பேசுகையில், “நான் கடந்த 18 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்து வருகின்றேன். இத்தனை ஆண்டு கால அனுபவத்தில், படப்பிடிப்புக்குச் சென்று அங்கு என்ன சீன் எடுக்கலாம் என்று யோசிக்கும் இயக்குநர்களைத் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் அலுவலகத்தில் இருந்து கொண்டே படப்பிடிப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதைக் கணிக்கும் திறமை கொண்ட இயக்குநர் புவனேந்திரன். என்ன சீன் எடுக்கப் போகிறோம், அது எப்படி அமைய வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்த போது எனது கதாப்பாத்திரத்தின் மீது எனக்கே மிகப் பெரிய நம்பிக்கை பிறந்தது. ஒரு நல்ல திரைப்படத்தில் நடித்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து கவிதா தியாகராஜன், புஸ்பா நாராயண், சீலன் ஆகியோர் படத்தில் தங்களது கதாப்பாத்திரங்கள் நிச்சயம் மக்களைப் பெரிதும் ஈர்க்கும் என்று தெரிவித்தனர்.

மேலும், இப்படத்திற்குச் சைக்கோ மந்த்ரா இசையமைத்துள்ளார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் அதில் இரு பாடல்களைத் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

அண்மைக் காலங்களாக மலேசியாவில் நல்ல கதையம்சத்துடன் கூடிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தின் சிறிய பட்ஜட் படங்களுக்கு இணையாக மலேசியப் படங்களின் தரமும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில், மறவன் தொடங்கியது முதல் அதன் விளம்பரங்கள், படப்பிடிப்பு பற்றிய தகவல்கள், நடிகர்கள் முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரை அனைத்திலும் ஒரு நிதானமும், நம்பிக்கையும், தெளிவும் உள்ளதைக் காண முடிகின்றது.

எனவே நிச்சயம் ‘மறவன்’ நம் மனதில் நிற்கும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

குறிப்பு: செய்தியாளர் சந்திப்பில் படம் குறித்து கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்வி -பதில்கள் அடுத்த செய்தியில் தொடரும்..

– ஃபீனிக்ஸ்தாசன்