கோலாலம்பூர், ஜூலை 4 – பிரதமரின் தனிப்பட்ட சொந்த வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 3 நிறுவனங்கள் மீது அரசாங்க அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை அதிரடிச் சோதனை நடத்தியதாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் (படம்) அறிவித்துள்ளார்.
சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கனி பட்டேல் தெரிவித்துள்ளார். ஊழல் தடுப்பு ஆணையம், காவல் துறை, மத்திய வங்கி (பேங்க் நெகாரா) ஆகிய மூன்று அமைப்புக்களின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த அதிரடிச் சோதனைகளை நடத்தினர் என்றும் கனி பட்டேல் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தனது பார்வைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார்களில் சம்பந்தப்பட்டுள்ள ஆவணங்களும் அடங்கும் என்றும் கனி பட்டேல் தெரிவித்துள்ளது மலேசியர்களிடையே சில அதிர்வுகளையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கத் தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கனி பட்டேல் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையும், சரவாக் ரிப்போர்ட் என்ற இணையதளமும் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நஜிப்பின் சொந்தத் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் என்று நம்பப்படும் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக ஆதாரங்களின் அடிப்படையிலான கட்டுரைகளை வெளியிட்டிருந்தன.
முக்கிய அரசு இலாகாக்கள் மூன்றும் ஒருங்கிணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் செயல்பட்டிருப்பதால், நிபுணத்துவ அடிப்படையில், வெளிப்படையான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கனி பட்டேல், அனைவரும் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.