மலாக்கா, மார்ச் 8 – நேற்று இரவு மலாக்கா, புக்கிட் கத்தில் என்ற இடத்தில் பி.கே.ஆர் கட்சியினரால் நடத்தப்பட்ட பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் அந்த கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். அம்னோ ஆதரவாளர்கள் சிலர் இதை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி முகநூலில் குறிப்பிட்டுள்ள பி.கே.ஆர் கட்சியினர், தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டும் நிலையில் உள்ள அந்த ஆடவரின் படத்தையும் வெளியிட்டுள்ளனர். மேலும் பி.கே.ஆர் கட்சியினரின் பிரசார வாகனமும் இக்கல்வீச்சு சம்பவத்தில் சேதமடைந்தது. இதற்கு முன் பேராக், ஜோகூர், கிளந்தான் உட்பட பல இடங்களில் இப்பிரச்சார வாகனம் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கல்வீச்சில் சம்பவத்தில் காயமடைந்தவரின் பெயர் அப்துல் கனி புவாங் 44, கம்போங் புக்கிட் லிந்தாங் பகுதியைச் சேர்ந்தவர் என்ற தகவலை புக்கிட் கத்திலைச் சேர்ந்த பாஸ் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர் இச்சம்பவம் பற்றி கூறும்பொழுது, ” எங்களை நோக்கி போத்தல்கள் எறியப்பட்டன அதைத் தவிர்க்க முயற்சிக்கும் போது அதோடு சேர்த்து கல் ஒன்று வந்ததை நான் கவனிக்கவில்லை. இதனால் என் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.காவல்துறையினரின் கண் முன்னே நடந்த இச்சம்பவத்தை அவர்கள் தடுத்து நிறுத்தாமல் அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தது மிகவும் வருத்தமளிக்கிறது ” என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ராசா நாடாளுமன்ற உறுப்பினர் லோக் சியு புக் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள செய்தியில் “புக்கிட் கத்திலில் நடைபெறவிருந்த பிகேஆர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள அன்வார் இப்ராஹிமுடன் மலாக்காவிலிருந்து வந்தேன்.அப்போது அருகில் அம்னோ கட்சியினரின் கூட்டமொன்று நடந்து கொண்டிருந்தது. அதில் வெறும் நூற்றுக்கு மேற்பட்டவர்களே இருந்தனர். பொதுத்தேர்தலில் தாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் இவ்வாறு கலகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அம்னோவின் இது போன்ற சலசலப்பிற்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை.வருகிற பொதுத் தேர்தலில் தேசிய முன்னைணியை வீழ்த்துவதற்கான மக்களின் எழுச்சி மேலும் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.