கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகும் தம் முடிவிற்கு ஆதரவு தெரிவித்த ரபிசி ரம்லி மற்றும் கைரி ஜமாலுடினுக்கு, நூருல் இசா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு ரபிசியே சிறந்தத் தேர்வாக தாம் கருதுவதாக இசா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பி.கே.ஆர் கட்சித் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கைரி ஜமாலுடின் தனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தத் தலைவர் என இசா விவரித்தார்.
“நன்றி, மதிப்பிற்குரிய கைரி ஜமாலுடின். 2008-ஆம் ஆண்டு முதல், நீங்கள் எதிரில் இருந்து எனக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறீர்கள். உங்களின் அரசியல் தடம் இல்லாத மலேசியாவைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி, இசாவை ஒரு முன்மாதிரி நாடாளுமன்ற உறுப்பினர் எனப் புகழ்ந்தார்.
பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா நேற்று விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.