Home இந்தியா அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் : ஜெயலலிதா அறிவிப்பு

809
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஜூலை 8- அதிமுக அரசின் நான்காண்டு காலச் சாதனைகளை விளக்கியும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வருகிற 10-ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழக மக்களே! ‘கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் நிற்க முடியும்?’ என்ற மானிடத்தின் தொன்று தொட்ட நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் எல்லா வகையான சோதனைகளையும் வென்று காட்டி, அ.தி.மு.க. மக்கள் பணியில் முழு அர்ப்பணிப்போடு 4 ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாம் ஆண்டில் வெற்றி நடை போட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

‘நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்’ என்ற எம்.ஜி.ஆரின் கொள்கை முழக்கத்திற்கு ஏற்ப, தமிழக மக்களுக்காக உயர்ந்த லட்சியங்களோடு அ.தி.மு.க. அரசு பல்வேறு சரித்திரச் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தத் திட்டங்கள் அடைந்திருக்கும் வெற்றியின் காரணமாகத் தேசிய அளவிலும், உலக அரங்கிலும் பல பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் எனது தலைமையிலான அரசு பெற்று வருகிறது.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மின் தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாகத் தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறது. 2011-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த முழு முதற் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமிதம் அ.தி.மு.க. அரசிற்கு உண்டு. எண்ணற்ற சாதனைகளைத் தமிழக மக்களுக்கு எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

இன்னும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழக மக்களுக்காகச் செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு, அடுத்து வரும் ஆண்டுகளிலும் பார் போற்றும் திட்டங்கள் பலவற்றை மக்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறது” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டங்கள் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அனைவரும், நகரம் தொடங்கி பட்டிதொட்டியெங்கும், தெருமுனைக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாகப் பரப்புரைப் பணிகளை முனைப்புடன் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுகவினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்