கோலாலம்பூர், ஜூலை 8 – அராப் மலேசியா வங்கியின் நிறுவனர் ஹூசைன் அகமட் நஜாடி, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டதில் பல சதித்திட்டங்கள் இருப்பதாகவும், மலேசியக் காவல்துறை அக்கொலைக்குப் பின்னணியில் இருப்பவர்களைத் தப்பிக்க விட்டுவிட்டது என்றும் நஜாடியின் மகனான பாஸ்கல் நஜாடி (படம்) தெரிவித்துள்ளார்.
‘சரவாக் ரிப்போர்ட்’ என்ற செய்தி நிறுவனத்திற்குப் பாஸ்கல் இன்று அளித்துள்ள பேட்டியில், தனது தந்தையைத் துப்பாக்கியால் சுட்டவரைப் பிடித்த காவல்துறை, அக்கொலைக்கான பின்னணிக் காரணங்களையும், மூளையாகச் செயல்பட்டவரையும் சுதந்திரமாக விட அனுமதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சீனக் கோயில் நிலத்தை மேம்பாட்டு நிறுவனங்களிடமிருந்து மீட்க உதவியதால் தான் கொலை செய்யப்பட்டார் என்ற ஆரூடத்தைப் பாஸ்கல் மறுத்துள்ளார்.
தனது தந்தையின் இறப்பிற்குச் சில மாதங்களுக்கு முன்பு மலேசியா வந்த போது, மலேசியாவில் பெரிய அளவில் நடக்கும் ஊழல் குறித்துத் தன்னிடம் பேசியதாகவும் பாஸ்கல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி, லோரோங் சிலோனில் அமைந்திருக்கும் சீனக் கோயிலின் கார் நிறுத்துமிடத்தில் வைத்து ஹுசைன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்ட தகவலின் படி, 700 மில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட அராப் மலேசியா (Ambank) வங்கிக் கணக்கிற்கு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 21 முதல் 25 தேதிகளில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணப்பரிமாற்றம் நடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹூசைன், மர்ம ஆசாமி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.