கோலாலம்பூர், ஜூலை 8 – மஇகாவின் தேசியத் தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளக் கூடாது என நேற்று அம்பாங் ஜெயா தொகுதியைச் சேர்ந்த மஇகா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திடம் இருந்து இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார் என நேற்று பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றில் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் தன்மீது அத்தகைய நீதிமன்ற உத்தரவு எதுவும் சார்வு செய்யப்படவில்லை என்றும் அதுவரை மஇகா தேசியத் தலைவராகத் தனது பொறுப்புகளை ஆற்றி வருவதை யாரும் தடை செய்ய முடியாது என்றும் பழனிவேல் கூறியதாக மலாய் மெயில் இணையச் செய்தித் தளம் தெரிவித்திருக்கின்றது.
இடைக்காலத் தடையுத்தரவு குறித்துத் தான் அறிந்துள்ளதாகவும், இருப்பினும் எந்தவித நீதிமன்றக் கடிதத்தையும் தான் இன்னும் பெறவில்லை என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.
அவ்வாறு நீதிமன்ற உத்தரவு சார்வு செய்யப்பட்டால், அதற்கேற்ப சட்ட ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று பழனிவேல் மேலும் கூறியிருக்கின்றார்.
பழனிவேலுவிடம் சார்வு செய்ய இயலவில்லை
இதற்கிடையில் இது குறித்துக் கருத்துரைத்த மஇகா மக்கள் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி, டத்தோ முனியாண்டியின் வழக்கறிஞர்கள் நேற்று காலை முதல் நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஆவணங்களைப் பழனிவேலுவிடம் சார்வு செய்ய முயன்று வருவதாகத் தெரிவித்தார்.
“அவரது இல்லத்திற்குச் சென்று நீதிமன்றக் கடிதங்களை ஒப்படைத்திருக்கின்றோம். அவர் அப்போது வீட்டில் இல்லை. அவருக்குப் பதிலாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டார். அவர் பழனிவேலுவின் மனைவியின் சகோதரி என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்” என வேள்பாரி மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பழனிவேலுவைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நிறுவனம் முனியாண்டியின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்களைத் தங்களிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் வேள்பாரி கூறியிருக்கின்றார்.