புது டெல்லி, ஜூலை 9 – சீன நிறுவனங்களுக்கும், சாம்சுங் போன்ற பிரபல நிறுவனங்களுக்கும் இணக்கமான சந்தையாக இருக்கும் இந்தியா, ஆப்பிளுக்குப் பெரும்பாலும் சோதனைக் களமாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணம், ஆப்பிள் தயாரிப்புகளின் விலை நிலவரங்கள் தான். இதுநாள் வரை மேற்கத்திய நாடுகளிலும், ஆசிய அளவில் சீனாவிலும் கவனம் செலுத்தி வந்த ஆப்பிள், இந்தியச் சந்தைகளையும் கைப்பற்ற பலமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் தொடக்கமாக ஐபோன் 6 வெளியான தருணங்களில் வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து தவணை முறையில் தனது தயாரிப்பினை விற்பனை செய்த ஆப்பிள், தற்போது இந்திய மக்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு 10 ரூபாய்க்குத் தனது ஐஒஎஸ் செயலிகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்தியாவில் ஐஒஎஸ் செயலிகள் அமெரிக்க டாலர்களில் தான் விற்பனை செய்யப்பட்டு வந்தன. 0.99 டாலர் என நிர்ணயிக்கப்பட்ட ஐஒஎஸ் செயலியில் இந்திய ரூபாய் மதிப்பில் 60 வரை விற்பனை செய்யப்பட்டன.
அண்டிரொய்டில் இலவசச் செயலிகள் அதிக அளவில் கிடைப்பதாலும், அப்படியே விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவை மலிவு விலையில் கிடைப்பதால், இதுநாள் வரை இந்திய மக்கள் ஐஒஎஸ் செயலிகளைப் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், ஆப்பிள் 10 ரூபாய் முதல் தனது செயலிகளை விற்பனை செய்ய ஆப்பிள் மேம்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 10 ரூபாயில் ஐஒஎஸ் செயலிகளை எளிதாக வாங்க முடியும் என்பதால், இந்தச் செயலிகள் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது.
இதே போன்ற அறிவிப்பினை ஆப்பிள் நிறுவனம், ரஷ்யா, மெக்ஸிகோ உள்ளிட்ட சில நாடுகளிலும் வெளியிட்டுள்ளது. பொதுவாக அண்டிரொய்டின் இலவசச் செயலிகளில் விளம்பரம் பெரிய அளவில் பயனர்களை இம்சிக்கும். ஆனால், ஆப்பிளின் மலிவு விலைச் செயலிகள், விளம்பரங்கள் இல்லாதவை. இதன் மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், செயலிகள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது.