Home இந்தியா ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்!

ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்!

645
0
SHARE
Ad

19-hemamalini2300ஜெய்ப்பூர், ஜூலை 9 – ராஜஸ்தானின் தவுசா பகுதியில் நடந்த கார் விபத்தில் குழந்தை பலியான சம்பவத்தில், ஆபத்தில் இருந்த குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை என இந்தி நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியிடம் ராஜஸ்தான் மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் ஹேமமாலினியின் கார், மற்றொரு காருடன் விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் எதிரே வந்த காரில் தன் பெற்றோருடன் பயணித்த 4 வயது குழந்தை சோனம் பரிதாபமாகப் பலியானார்.

விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், ஹேமமாலினியின் உறவினர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஹேமமாலினியின் முகத்தில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பி உள்ள நிலையில், இறந்த குழந்தையின் தந்தை, விபத்திற்குக் காரணம் ஹேமமாலினியின் கார் தான் என்றும், சம்பவம் நடந்த பகுதியில் அவரின் கார் அதிவேகத்துடன் வந்ததால் தான் விபத்து நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், எங்கள் குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், வந்தவர்கள் ஹேமமாலினியை மருத்துவமனையில் சேர்க்கவே நினைத்தனர். 15 நிமிடங்களுக்கும் மேலாக குழந்தை சோனம் விபத்து நடந்த பகுதியில் கிடந்ததாகவும், ஹேமமாலினியுடனே அவளையும் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவள் இறந்திருக்கமாட்டாள் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் டுவிட்டர் வாயிலாக ஹேமமாலினி வெளியிட்ட அறிக்கையில், விபத்து ஏற்பட்டதற்குக் குழந்தையின் தந்தை தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே தான், ராஜஸ்தான் மனித உரிமை ஆணையம், விபத்து நடந்த போது ஆபத்தில் இருந்த குழந்தையைக் காப்பாற்றாமல் நீங்கள் மட்டும் ஏன் காரில் ஏறிச் சென்றீர்கள். அதற்கு முறையான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

இணைய வாசிகளும், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹேமமாலினி குழந்தையைக் காப்பாற்ற முடியாததற்குக் காரணம் கூறாமல், குழந்தையின் தந்தையின் மீது பழி சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.