(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
அந்தக் கால இந்திய நடிகைகளில் முதுமையடைந்தும் இன்னும் இளமையும், கவர்ச்சித் தோற்றமும் குறையாமல் இருக்கும் நடிகை யார் என ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் அதில் பெரும்பாலான இரசிகர்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடிப்பவர் இந்தி நடிகையும், தமிழ்ப் பெண்ணுமான ஹேமமாலினியாகத்தான் இருப்பார்.
அவருக்கு இப்போது வயது 71!
இடைவிடாத நடனப் பயிற்சி, ஒழுங்குமுறை தவறாத உணவுக் கட்டுப்பாடு, ஆலிவ் எண்ணெயில்தான் சமையல், சைவ உணவுகள், தியானம், யோகா – என ஹேமமாலினி கடைப்பிடிக்கும் நடைமுறைகள்தான் அவரது இளமைத் தோற்றத்திற்குக் காரணம் என்கின்றன சில ஊடகங்கள்.
2003 முதல் 2009 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் (இராஜ்ய சபா) உறுப்பினராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர், 2014 பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜகவால் களமிறக்கப்பட்டார்.
முதல் தேர்தலிலேயே 5 இலட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் பெற்று 3 இலட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஹேமமாலினி. அதே போன்றதொரு வெற்றியை மீண்டும் பதிவு செய்வார் என்ற நம்பிக்கையில் அவரை மீண்டும் களமிறக்கியிருக்கிறது பாஜக.
இந்த முறை ஹேமமாலினிக்கு களம் முன்பு போல் சாதகமாக இருக்கும் எனக் கூறமுடியாது. உத்தரசப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது இருக்கும் செல்வாக்கு சரிந்திருப்பது, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பிஎஸ்பி கட்சியும், அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சியும் இணைந்து கரங்கோர்த்திருப்பது, மோடியின் செல்வாக்கும் சரிந்திருப்பது – போன்ற அம்சங்களால் ஹேமமாலினி கடுமையான போட்டியை எதிர்நோக்குகிறார்.
அவரை எதிர்த்து நிற்பது ஆர்எல்டி கட்சியின் நரேந்திர சிங், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகேஷ் பத்தக் ஆகியோர். இவர்கள் யாரும் ஹேமமாலினியைப் போன்ற பிரபலமோ, சினிமாக் கவர்ச்சி கொண்டவர்களோ கிடையாது என்பது ஹேமமாலினிக்கு இருக்கும் இன்னொரு சாதகம்.
ஹேமமாலினியின் கணவர் நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவிக்கு பிறந்தவரும் நடிகருமான சன்னி டியோலும் அண்மையில் அதிகாரபூர்வமாக பாஜகவில் சேர்ந்திருக்கிறார். அவரது பூர்வீக மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்புர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சன்னி டியோலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை பல சினிமா நட்சத்திரங்களை வேட்பாளர்களாக பாஜக களமிறக்கியிருக்கிறது.
தமிழ்ப் பெண்ணான ஹேமமாலினியை, இந்தி பேசும் முதன்மை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில், அவரது சினிமாக் கவர்ச்சியை நம்பி இரண்டாவது முறையாகவும் களமிறக்கியிருக்கிறது பாஜக.
ஹேமமாலினி இரண்டாவது முறையாகவும் மதுரா தொகுதியில் வென்று காட்டுவாரா?