சென்னை,ஜூலை 9- இயக்குநர் செல்வராகவனின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலாபாஸ்கர்.
அவருடைய மகனைக் கதாநாயகனாக வைத்துச் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் இயக்கத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்றொரு படத்தைத் தொடங்கினார்.
பேருக்குத்தான் கீதாஞ்சலி இயக்குநர். ஆனால்,செல்வராகவன் தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம்.
அந்தப்படத்தின் படப்பிடிப்பு சிலநாட்கள் நடந்தது. அதன்பின் அந்தப்படவேலைகளில் ஆர்வம் காட்டாமல், சிம்பு படத்தை இயக்கப் போய்விட்டார் செல்வராகவன். கீதாஞ்சலியும் அவருக்குத் துணையாகச் சென்றுவிட்டார்.
மகனைக் கதாநாயகனாக்குவதால் அந்தப்படத்துக்கு நிறையச் செலவு செய்துவிட்ட தயாரிப்பாளர் கோலாபாஸ்கர், இந்தப்படத்தை முடித்துக்கொடுங்கள் என்று பலமுறை கேட்டும் செல்வராகவன் அவருக்குச் செவிமடுக்கவில்லை.
இதனால் கோபம் கொண்டு கோலாபாஸ்கர் சத்தம் போட, ‘கான்’ படத்திலிருந்து அவரைத் தூக்கிவிட்டு வேறொரு படத்தொகுப்பாளரை ஒப்பந்தம் செய்துவிட்டார் செல்வராகவன்.
இதனால் மனம் நொந்து, அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகப் புலம்ப, பயந்து போன செல்வராகவன், கான் படத்தைத் தள்ளி வைத்துவிட்டுத் தற்போது மாலை நேரத்து மயக்கம்’ படத்தை முடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டார்.