புதுடெல்லி, ஜூலை 10 – தனது இல்லத்தில் விதிகளை மீறி முறைகேடாகத் தொலைபேசி இணைப்பகம் அமைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் மத்தியத் தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் முன்பிணை பெற்றுள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவரது பிணையை ரத்து செய்யக்கோரி, அவர் மீது வழக்குத் தொடுத்த சிபிஐ, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு பிணை ரத்து செய்யப்படுமானால், தயாநிதி மாறன் உடனடியாகக் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
கடந்த 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் தயாநிதி மாறன். இச்சமயம் அவர் தனது வீட்டிலேயே பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனத்தின் இணைப்பகம் ஒன்றை முறைகேடாக அமைத்ததாகப் புகார் எழுந்தது.
மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு 24371515 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்குறிப்பிட்ட தொலைபேசி எண் சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல என்றும், அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசிச் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் பின்னர் தெரியவந்தது.
மேலும் தன் வீட்டிலேயே தொலைபேசி இணைப்பகம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் 323 தொலைபேசி எண்களைக் கொண்டு சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணிகளுக்கு அவர் பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இந்த வகையில் மத்திய அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டிய சிபிஐ, தயாநிதி மீது வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்பிணை பெற்றார் தயாநிதி. இதையடுத்து இம்மாதத் தொடக்கத்தில் டெல்லியில் வைத்து அவரைச் சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரித்தனர்.
எனினும் பல கேள்விகளுக்கு மழுப்பலாகவும், நழுவலாகவும் பதிலளித்த அவர், குறிப்பிட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்ததாகத் தெரிகிறது.
விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் முன்பிணை ரத்து செய்யப்படும் எனத் தயாநிதியிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. தற்போது அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுப்பதால், உயர்நீதிமன்றத்தை அணுகி அவருக்கான முன்பிணையை ரத்து செய்யக் கோருவதென சிபிஐ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்குப் பிடி இறுகி வருகிறது. முன்பிணை ரத்து செய்யப்பட்டால், அடுத்த நிமிடமே தயாநிதி கைது செய்யப்படலாம் எனச் சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.