Home இந்தியா ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் திமுக மனுவிலும் குளறுபடிகள்

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் திமுக மனுவிலும் குளறுபடிகள்

422
0
SHARE
Ad

jayalalitha-karunanidhi_0புதுடெல்லி, ஜூலை 10 – சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவிலும் குறைபாடுகள் உள்ளதாக உச்சநீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 9 குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றைச் சரி செய்த பின்னர் மீண்டும் மனுத்தாக்கல் செய்யுமாறும் திமுக தரப்புக்குப் பதிவாளர் அறிவுறுத்தி உள்ளார்.

இதே வழக்குத் தொடர்பாக அண்மையில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிலும் ஏராளமான குறைபாடுகள் இருப்பதை உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா விடுதலையை எதிர்க்கும் இரு மேல்முறையீட்டு மனுக்களும் குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்துக் கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கடந்த 6-ம் தேதி இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

மொத்தம் 2300 பக்கங்கள் கொண்ட இம்மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், குறிப்பிட்ட 9 குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளின் தீர்ப்பாணைகள் முழுமையாக இணைக்கப்படவில்லை.வழக்குத் தொடர்பான அரசாணைகள், வழிகாட்டுதல்கள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கியக் குறிப்புகள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியன மனுவுடன் இணைக்கப்பட‌வில்லை என மனுவில் காணப்படும் குறைபாடுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த மேல் முறையீட்டு மனுவைக் கவனமாகத் திருத்தி, மீண்டும் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே கர்நாடகா அரசுக்கும் இதே போன்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்துக் கர்நாடகா அரசு மற்றும் திமுக ஆகிய இரு தரப்புகளிலும் குறைபாடுகளைக் களையும் நடவடிக்கை தொடங்கியுள்ளன.

எனினும், மனுக்களை மீண்டும் தாக்கல் செய்து, இந்த வழக்கு குறிப்பிட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதற்குக் குறைந்தபட்சம் ஒருமாத காலமாகும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.