Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: பாகுபலி – இந்திய சினிமாவின் இன்னொரு மைல் கல்! திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய...

திரைவிமர்சனம்: பாகுபலி – இந்திய சினிமாவின் இன்னொரு மைல் கல்! திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!

1147
0
SHARE
Ad

Baahubali-Movie-Songs-Leaked-Online-Listen-Here1ஜூலை 10 – இந்திய சினிமாவின் 100 ஆண்டுகால அனுபவத்தை, உலகமே எதிர்பார்க்க இன்று வெளியான பாகுபலி படத்தில் காணமுடிந்தது. காட்சிகளிலும், தொழில்நுட்பத்திலும், இசையிலும் ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக, உலகத்தரத்தில் அத்தனை பிரம்மாண்டம். வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், படம் தொடங்கியது முதல் முடியும் வரை நம்மை எங்கும் நகரவிடாமல் காட்சிகளில் அத்தனை சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கிறது பாகுபலி.

‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவரான ராஜமௌலி இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், சுதீப், ரோஹினி உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி இன்று உலகமெங்கும் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

கதைச் சுருக்கம்

மகிழ்மதி அரசின் வாரிசைக் கையில் எடுத்துக் கொண்டு மலை உச்சியில் இருந்து குகை வழியே தப்பியோடி வரும் ரம்யா கிருஷ்ணன், அதை அப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்களிடம் ஒப்படைத்து விட்டு மலை உச்சியைக் கைகாட்டிவிட்டு இறந்துவிடுகின்றார்.

hqdefault

அரச வாரிசு என்று தெரிந்தும் அக்குழந்தையை எடுத்து வளர்க்கும் ரோஹினி, அதற்குச் சிவா என்று பெயர் சூட்டுகின்றார். சிவா வளர்ந்து பெரியவனாகிறான். அங்கிருக்கும் நீர் அருவி வழியே மலை உச்சியை அடைய வேண்டும் என்று பேரார்வம் கொள்ளும் சிவா பலமுறை தோல்வியைத் தழுகின்றான். அவனை அந்த மலை உச்சிக்கு மட்டும் போக வேண்டாம் என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார் ரோஹினி. என்றாலும் ஒருநாள் சிவா கடின முயற்சிகளுக்குப் பிறகு மலை உச்சியை அடைகின்றான்.

அங்கு தான் யார் என்று தெரிந்து கொள்ளும் சிவா, தனது கடமையை நிறைவேற்றுகின்றான். இது தான் பாகுபலி படத்தின் கதை.

நடிப்பு

சிவா மற்றும் பாகுபலி கதாபாத்திரங்களில் பிரபாஸ் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்கே உரிய பிரம்மாண்ட தோற்றத்துடனும், கட்டுமஸ்தான உடற்கட்டுடனும் இருக்கிறார். அவ்வளவு பெரிய சிவன் சிலையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு நடக்கும் காட்சி.. அடடா.. அவ்வளவு அழகு..

நீர் அருவியில் ஏறி ஒவ்வொரு முறையும் அவர் கீழே விழும் காட்சிகள் நம்மை இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்து விடுகின்றன. அவ்வளவு பிரம்மாண்டமான அருவியில் இருந்து தவறி விழுந்து ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைப்பது போல் காட்டியிருப்பது சற்று மிகை தான் என்றாலும், பிரபாஸின் பிரம்மாண்ட உடற்கட்டும், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் வலிமையைப் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகளும் நம்மை நம்ப வைக்கின்றன.

prabhas-baahubali-video-a-rage-online

சிவா கதாபாத்திரத்தில் கொஞ்சம் விளையாட்டுப் போக்காக நடித்திருக்கும் பிரபாஸ், அதற்கு அப்படியே நேர் மாறாகப் பாகுபாலி கதாபாத்திரத்தில் இளவரசராக முகபாவனைகளாலும், உடல்மொழிகளாலும் கவர்ந்து இழுக்கிறார். வீரத்திலும், புத்திசாலித்தனத்திலும் அவர் சிறந்து விளங்குவதாகக் காட்டப்படும் காட்சிகள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

இதுவரை தமன்னாவின் நடிப்பைப் பிடிக்காதவர்களுக்குக் கூட, இந்தப் படத்தில் அவரை மிகவும் பிடித்துவிடும். அவந்திகாவாக வாள் வீசுவதிலும், சிவாவின் பேச்சில் மயங்கிக் காதல் கொள்வதிலும் அத்தனை ஈர்ப்பு.

Tamanna-As-Avantika-In-Bahubali-9247

ரம்யா கிருஷ்ணன்.. அப்பப்பா.. எத்தனை மிடுக்கு.. தோரணை..ராணியாக வாழ்ந்திருக்கிறார்.

உதாரணத்திற்குப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேசும் ஒரு வசனம்.. “அவன் உயிரோடு இருக்க வேண்டும்.. அவன் கண்களைக் கழுகுகள் பிய்த்துத் தின்ன வேண்டும்.. அவன் கை கால்கள் வெட்டுண்டு இம்மண்ணில் கிடந்து துடிக்க வேண்டும். அவன் உயிரோடு இருக்க வேண்டும்”.

பல காட்சிகளில் கண்களாலேயே உருட்டி மிரட்டியிருக்கிறார்.

சில காட்சிகளே வந்தாலும், ரம்யாவுக்குச் சவால் விடும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா. தேவசேனையாக வயதான தோற்றத்தில் சில காட்சிகளே வந்தாலும் அவ்வளவு சக்தி வாய்ந்த கதாபாத்திரம்.

“என் மகன் வருவான்” என்று சத்தியராஜிடம் அழுத்தமாகக் கூறுவதிலும், சிவா வந்தவுடன் முகத்தில் காட்டும் மகிழ்ச்சியிலும் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் பெற்றுவிடுகின்றார்.

அறிமுகக் காட்சியிலேயே முஷ்டி முறுக்கிக் கொண்டு காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. பிரபாஸிற்குச் சமமான பிரம்மாண்ட உடற்கட்டுடன் சரிக்குச் சரியாகப் பொருந்துகிறார். இளவரசராக அரச கட்டளைகளுக்குக் கீழ் படிந்து கொண்டே நயவஞ்சகமாகப் பாகுபாலியை வீழ்த்த அவர் போடும் திட்டங்களில் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.

அதே போல, படத்தில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் சத்யராஜ். கிட்டப்பா கதாபாத்திரத்தில் அரச குடும்பத்தின் அடிமையாக அவர் நடித்திருக்கும் காட்சிகள் கண்களில் நீரை வர வைக்கின்றன. “வாக்குத் தந்தவர்கள் இறக்கலாம். ஆனால் தந்த வாக்கு என்றும் இறப்பதில்லை” என்று தான் அடிமையாக இருப்பதற்கான காரணத்தைச் சுதீப்பிடம் கூறும் இடங்கள் அற்புதம்.

கையில் ஈட்டியுடன் ஆவேசமாக ஓடி வந்து, எதிரில் நிற்பது பாகுபாலியின் வாரிசு என்று தெரிந்தவுடன் மண்டியிட்டு, அவர் காலைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொள்ளும் காட்சியில் சத்யராஜ் உண்மையில் வாழ்கிறார்.

இவர்களைத் தவிர வித்தியாசமான தோற்றத்தில் நாசர், ரோஹினி உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு நிச்சயமாக உலக அரங்கில் பேசப்படும் என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம் முதல் காட்சியிலேயே பிரம்மாண்டமான அருவியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி நம்மை ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றார் தெலுங்கு ஒளிப்பதிவாளர் கே.கே. செந்தில் குமார்.

rana-in-bahubali

அதுமட்டுமா? பனிப்பொழிவு, மலை உச்சிகள், போர்க்காட்சிகள் எனப் படம் முழுவதும் கடுமையான உழைப்பும், திறமையும் தெளிவாகத் தெரிகின்றது. இதுவரை இந்திய சினிமாவில் இதுவரை வராத அளவிற்குப் போர்க்காட்சிகள் அவ்வளவு சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே போல, படத்தொகுப்பும் மிகவும் இயற்கையாகத் தெரியும் வகையில் செய்யப்பட்டுள்ளது. பனிப்பொழிவு, யானைகள், காட்டெருமை ஆகியவற்றின் கிராபிக்ஸ் மிகச் சிறப்பாக வந்துள்ளது.முதல் பாடல் காட்சியில் தமன்னாவின் வாயசைவு சரியாகப் பொருந்தவில்லை. அது ஒன்று தான் சற்று வித்தியாசப்பட்டது.

கீரவாணியின் பின்னணி இசைக் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கின்றது. அதே போல் அனைத்துப் பாடல்களும் கேட்கும் ரகம்.

ரசித்தவை

1. வரலாற்றுக் காலத்தில் மன்னர்களின் வீரமும், ஆற்றலும், திறமையும், வாக்குறுதிகளை மதித்து அதை நிறைவேற்றுவதும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

2. போர்க் காட்சிகளில் எதிரிகளை வீழ்த்த போடப்படும் தந்திரங்களும், அதை நிறைவேற்ற பிரபாஸும், ராணாவும் எடுக்கும் முயற்சிகளும் வியக்க வைக்கின்றன. கடைசி 40 நிமிடக் காட்சிகளில் வரும் விறுவிறுப்பும், பரபரப்பும் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்கின்றது.

3. படத்தின் இன்னொரு பலம் கார்க்கியின் வசனங்கள்.

“வீரர்களே மரணம் என்பது என்ன? தாய்நாட்டைக் காப்பாற்றாமல் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிவது மரணம். எதிரிகளின் எண்ணிக்கையைக் கண்டு அஞ்சுவது தான் மரணம். என்னுடன் யார் வந்து இறந்தாலும் வாழப்போகிறீர்கள்?” “சாவதற்குள் அவனைப் பார்த்துவிட வேண்டும் என்று நீயும், இன்னொரு முறை அவனை மனம் குளிரக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகின்றோம். ஆனால் இரண்டுமே நிறைவேறாத ஆசைகள்” இப்படியாகப் படத்தில் கைதட்ட வைக்கும் வசனங்கள் கார்க்கியின் வரிகளில் வந்துள்ளன.

4. படம் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா என எண்ணும் அளவிற்குச் சுவாரஸ்யமாகக் கொண்டு வந்துவிட்டு, கடைசியாகச் சத்தியராஜின் ஒற்றை வசனத்தில், அடுத்த பாகத்திற்கு இப்பொழுதே ரசிகர்களைத் தயார்படுத்திவிட்ட இயக்குநரின் புத்திசாலித்தனத்திற்குப் பாராட்டுகள்.

மொத்தத்தில், பாகுபாலி – திரையரங்கிற்குச் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அற்புதமான படைப்பு. இந்தியச் சினிமாவில் இன்னொரு மைல் கல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

– ஃபீனிக்ஸ்தாசன்