புதுடில்லி, ஜூலை 10-மூன்று ஆண்டுகளுக்கு முன் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, இந்தியாவில் பெரும் பரபரப்பையும் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இம்முறைகேட்டில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டுப் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தொடர்புடைய மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை தற்போது கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் பயணமாகி இருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடியில் தனியார் வங்கி ஒன்றுக்கும் தொடர்புள்ளதாகத் தெரிகிறது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இவ்விசயத்தில் உதவியதாகவும், 2ஜி முறைகேட்டில் கைமாறிய லஞ்சப்பணம் துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்து ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளை அந்தத் தொகை சென்றடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகமதாபாத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனங்களின் ஹவாலா மோசடி குறித்து நடத்திய விசாரணையின்போது 2ஜி முறைகேட்டில் பெறப்பட்ட லஞ்சப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோல, சுமார் 10,000 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வெளியே சென்றிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.