சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன.
இதனிடையே, அண்மையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சர்ச்சையாகப் பேசியதை அடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றினை அவருக்கு அனுப்பியுள்ளது.
தனது பேச்சுக்கு ஆ.ராசா மனம் திறந்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.
அவரது இந்த சர்ச்சை பேச்சு குறித்து இன்று (மார்ச் 31) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்கும்படி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அவ்வாறு விளக்கமளிக்காவிட்டால் எந்தவொரு முன் அறிவிப்புமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து இழிவான, அவதூறான கருத்துகளை நீங்கள் தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உங்கள் பேச்சு அவதூறானது மட்டுமல்லாமல் ஆபாசமாகவும், தாய்மை மீதான மரியாதையை குறைக்கும் வகையிலும் உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்,” என்று தேர்தல் ஆணையம் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.