Home நாடு வேட்புமனுத் தாக்கல் வெற்றி பெற்றதாக சோதிநாதன் அறிவிப்பு!

வேட்புமனுத் தாக்கல் வெற்றி பெற்றதாக சோதிநாதன் அறிவிப்பு!

558
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 10 – நேற்று ஒரே நாளில் நாடு முழுமைக்கும் வேட்புமனுத் தாக்கல் நடத்தி முடிக்கப்பட்டதில் தங்கள் தரப்பில் 80% சதவீத கிளைகள் பங்கு பெற்றதாகவும், எனவே இந்த வேட்பு மனுத் தாக்கல் வெற்றி என்றும் மஇகாவின் தலைமைச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் டத்தோ சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

Sothi---Featureபழனிவேல் இன்னும் தேசியத் தலைவர்தான் என்று கூறிவரும் சோதிநாதன் (படம்) அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வ தலைமைச் செயலாளர் தான் என்றும் அறிவித்துள்ளார்.

நேற்று மஇகா கிளைத் தலைவர்களுக்கு செல்பேசி மூலம் அனுப்பியிருக்கும் குறுஞ்செய்தியில் இந்த தகவலை சோதிநாதன் வெளியிட்டுள்ளார். ஜூலை 10ஆம் தேதி முதல் நடைபெறும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா தலைமையிலான மஇகாவின் வேட்புமனுத் தாக்கல் சட்டவிரோதமானது என்றும், பழனிவேலுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்துவது என்றும் சோதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சங்கப் பதிவகம் ஏற்றுக் கொள்ளுமா?

MIC-Logoஎனினும் சோதிநாதன் அறிவித்துள்ள அவரது தரப்பிலான இந்த வேட்புமனுத் தாக்கலின் முடிவுகளை சங்கப் பதிவகம் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து பழனிவேல் தரப்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கிளைகளின் வேட்புமனுத் தாக்கல் அல்லது தேர்தல்கள் முடிந்ததும் அந்தக் கிளைகளின் பொறுப்பாளர்கள் பட்டியல் மஇகா தலைமையகத்தின் மூலமாக சங்கப் பதிவகத்திற்கு அதிகாரபூர்வமாக அனுப்பிவைக்கப்பட வேண்டும். அவ்வாறு சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் கிளைகள்தான் அதிகாரபூர்வ கிளைகளாக சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படும்.

இந்நிலையில் பழனிவேல் தரப்பில் நடத்தப்பட்ட வேட்புமனுத் தாக்கல்களின் முடிவுகளை சங்கப் பதிவகம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த வேட்புமனுத் தாக்கல் சட்டரீதியாக செல்லுபடியாகும் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு தரப்பிலும் 30 சதவீத கிளைகள் வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூடும்

G-Palanivel1மஇகாவில் தற்போது நிலவி வரும் தலைமைத்துவப் போராட்டத்தால் ஏறத்தாழ 30 சதவீத கிளைகள் நடுநிலை வகிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

பழனிவேல்தான் இன்னும் தேசியத் தலைவரா என்பதில் குழப்பம் – பழனிவேலு தரப்பினரை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கம் – ஜூலை 13ஆம் தேதிதான் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் என்பதால் அதுவரை இரண்டு பக்கமும் வேண்டியவர்களாக இருப்போம் என்ற எண்ணம் – என்பது போன்ற பல காரணங்களால் பல மஇகா கிளைத் தலைவர்கள் இரண்டு தரப்பிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, நேற்று பழனிவேல் தரப்பில் வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்ட பெரும்பாலான கிளைகள் இன்று தொடங்கும் சுப்ரா தலைமையிலான அதிகாரபூர்வ மஇகா நடத்தும் வேட்புமனுத் தாக்கலிலும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுப்ரா தரப்பு வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகின்றது

SUBRAடாக்டர் சுப்ரா தலைமையிலான அதிகாரபூர்வ மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்று தொடங்குகின்றன.

கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் உள்ள மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறுகின்றது.

நாளை மலாக்கா, ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களுக்கான கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.

இந்த வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடையும்போதுதான், சுப்ரா தலைமையிலான மஇகா சார்பில் எத்தனை கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்டன என்ற விவரமும், பழனிவேல் தரப்பில் வேட்புமனுத் தாக்கலில் நேற்று கலந்து கொண்ட கிளைகளில் எத்தனை கிளைகள் சுப்ரா தரப்பிலும் வேட்புமனுத் தாக்கல்களில் கலந்து கொண்டன என்பது போன்ற விவரமும் பகிரங்கமாகத் தெரியவரும்.

ஜூலை 13ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவரும்போது, அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மஇகாவில் தற்போது நீடித்துவரும் இரண்டு தரப்புகள் என்ற நிலைமை மாறி மஇகா ஒரே தரப்பாக அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும், மஇகாவில் ஏற்பட்டுள்ள சட்டப் போராட்டம் ஓயாது என்றும் வழக்கு தொடுத்த காரணத்தால் தங்களின் மஇகா உறுப்பியத்தை இழந்துள்ள பழனிவேல், சோதிநாதன் உள்ளிட்ட ஐவர் தங்களின் மஇகா உறுப்பியத்தைத் திரும்பப் பெறுவதற்காக அடுத்த கட்ட சட்டப்போராட்டம் தொடங்கலாம் என்றும் மஇகா பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.