சர்ச்சைகள், நீதிமன்றங்கள், சிறைவாசம் இதெல்லாம் ஜெயலலிதாவிற்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் தமிழக மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. திமுக தலைவர் கருணாநிதி தான், ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அனுதாபம் தெரிவிப்பது போல் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் இது தொடர்பாகப் பரவலாகப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆர் மணி அளித்துள்ள பேட்டியில், “ஜெயலலிதா பொது வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். அவை எதுவும் அவரைப் பெரிய அளவில் பாதித்தது இல்லை. ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியானது முதல் அவரின் உடல்நலன் பாதிப்பிற்கு உள்ளானது. அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்ற நிகழ்வின் போதே கண்கூடாக அனைவருக்கும் தெரிய வந்தது. இருப்பினும் அவர் வெளிப்படையாக எதுவும் கூறாத வரை, இதுபற்றி விவாதிக்க முடியாது.”
“எனினும், அவரின் உடல்நலன் கருதியே நீண்ட நாட்களாகச் சட்டமன்றம் கூட்டப்படாமல் உள்ளது. இது கண்டிப்பாக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜெயலலிதா கொடநாட்டிலேயே தங்கி மருத்துவச் சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.