சென்னை, ஜூலை 12- அதிமுக-வில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடந்தது.
மாவட்ட நிர்வாகி, பொதுக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இரண்டு கட்டமாகவும் மற்றும் வெளி மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாகவும் நடந்தது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அதிமுக-வில் 50 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலப் பொறுப்பாளருக்கும்10 மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன.
உட்கட்சித் தேர்தல் திட்டமிட்டபடி, ஏப்ரல் 30-ஆம் தேதி நிறைவடைந்தது.
ஊராட்சி அளவிலான பதவிகளில் பெரும்பாலான இடங்களில் நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், நகரம், ஒன்றியம், மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்ததால், நிர்வாகிகள் தேர்வை எந்தவிதச் சச்சரவும் இல்லாமல் சுமுகமாக முடிக்கும்படி, மண்டலப் பொறுப்பாளர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி,மண்டலப் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும், தங்கள் வீட்டிற்கு நேரில் வரவழைத்து, நேர்காணல் நடத்தி, சுமுகமாக நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்தனர்.
ஆனால், மாவட்டச் செயலாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதாவே தயார் செய்து கொள்வதாகத் தெரிவித்துவிட்டார்.
இந்த வாரத்தில், மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
மொத்தமுள்ள 50 மாவட்டங்களில் அதிகப் புகாருக்கு ஆளான மாவட்டச் செயலர்களை மட்டும் நீக்கி விட்டு, மற்றவர்களுக்குத் தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பதவி வகிக்க வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
அதன்படி,தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்களில், 16 பேர் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நீக்கப்பட்டோர் பட்டியலில் இருப்போர் யார் யார்? நீடிப்போர் பட்டியலில் இருப்போர் யார் யார்?என்பது தெரியாமல் மாவட்டச் செயலர்கள் அனைவரும் பதவி தப்புமா? அல்லது பறிபோகுமா? என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள்.