சென்னை, ஜூலை 12 – திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே ‘பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்து வருகின்றது.
ஏறத்தாழ, நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்குப் புதிய திரைப்பட அனுபவத்தைத் தந்திருக்கும் ‘பாகுபலி’ முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்து, இந்திய சினிமா உலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
முதல் நாளிலேயே தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 30 கோடி ரூபாய் அளவிற்கும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 15 கோடி ரூபாய் அளவிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 15 கோடி ரூபாய் அளவிற்கும் வசூல் செய்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படமாக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் பாராட்டுகள் பல குவிந்தாலும், படத்தைப் பற்றி இரண்டு குறைகள் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதல் குறை, படத்தின் இறுதிச் சண்டைக் காட்சி பிரம்மாண்டமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் தரமாக இருந்தாலும், அலுப்புத் தட்டும் அளவுக்கு மிகவும் நீளமாக இருக்கின்றது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இரண்டாவது குறை, இரசிகர்கள் ஆவலுடன் அனுஷ்காவைப் பார்க்கக் காத்திருக்க, படத்தின் இறுதி வரை அவரது இளமைக்காலத் தோற்றம் காட்டப்படவே இல்லை. அவரது முதுமையான தோற்றமே காட்டப்படுகின்றது. இது ஒரு குறையாக இரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இளமைக்கால அனுஷ்காவுக்காக அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டுமா என்ற ஆதங்கமும் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
படத்தில் தாய் வேடத்தில் வரும் அனுஷ்காவின் தோற்றம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மற்ற அம்சங்களில் படம் பற்றிய விமர்சனங்கள் சாதகமாக இருப்பதால் படத்தின் வசூல் அடுத்த நாட்களில் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெலுங்கு, தமிழ் மொழிகளில் நேரடியாக ‘பாகுபலி’ திரைப்படம் வெளிவந்திருப்பது இரண்டு மாநில திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் மலையாளம்,ஹிந்தி மொழிகளிலும் ‘பாகுபலி’ வெளிவந்து கூடுதல் வரவேற்பையும், கூடுதலான வசூலையும் பெற்றுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வந்த பாகுபலி இன்னொரு விதத்திலும் இந்தியச் சினிமா வரலாற்றில் முன்னோடிப் படமாகக் கருதப்படுகின்றது.
படத்தின் முடிவு வழக்கமான இந்திய சினிமா போன்று இல்லாமல், ஒரு ‘சஸ்பென்சான’ முடிவோடும், அடுத்து என்ன நடக்கும் என்பதை இரசிகர்களின் யூகத்திற்கே விட்டுவிடும் விதத்திலும் படம் முடிவடைகின்றது.
இந்திய சினிமா வரலாற்றில் முழுமையான படமும் இரண்டு தனிப்பட்ட திரைப்படங்களாக முழுவதும் எடுக்கப்பட்டு, ஒரு வருட இடைவெளியில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகின்றது.
பாகுபலியின் இரண்டாவது பாகமும் முழுவதுமாக எடுக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்று கூறப்படுகின்றது.
இதன், படத் தயாரிப்புக்குப் பிந்திய தொழில்நுட்ப வேலைகள் இனி தொடங்கும் என்றும், பாகுபலியின் வெற்றியினால், இரண்டாவது பாகமும் இதைவிடப் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், இரசிகர்களின் எதிர்பார்ப்பினால் இன்னொரு மிகப்பெரிய வெற்றியையும் பெறும் என்றும் சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
– இரா.முத்தரசன்