Home அவசியம் படிக்க வேண்டியவை நினைவஞ்சலி: தமிழர் வாழ்வில் என்றென்றும் எம்எஸ்வி!

நினைவஞ்சலி: தமிழர் வாழ்வில் என்றென்றும் எம்எஸ்வி!

788
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 16 –  (கடந்த 14 ஜூலை 2015ஆம் நாள் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர்  இரா.முத்தரசன் வழங்கும் நினைவஞ்சலி)

தமிழகத் தொலைக்காட்சிகள் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனின் மறைவை அறிவித்துக் கொண்டும், அவரது இல்லத்திற்கு வருகை தந்து, அஞ்சலி செலுத்துபவர்களின் அஞ்சலி உரைகளை நேரலையாகவும் ஒளிபரப்பிக் கொண்டும் இருந்த நேரம்.

MS Visvanathan

#TamilSchoolmychoice

மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வந்த நடிகர் சிவகுமாரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசியதன் சாரம்சம் இதுதான்:-

“ஏழ்மையில் வாடிய ஒரு பத்து வயது பையன். வருமானத்திற்காக சினிமாத் தியேட்டர்களில் சிற்றுண்டி விற்று வாழ்ந்து வருகின்றான். அதனால் சினிமா பாடல்களோடு பரிச்சயமாகின்றான். அவனது பக்கத்து வீட்டுக்காரர் சங்கீத வித்வான். வசதி படைத்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றார். ஆர்வத்தோடு அந்த சங்கீத வித்வானின் வீட்டுக்கு வெளியே நின்று அவரது சங்கீதப் பாடங்களைக் கேட்கின்றான். ஒரு கட்டத்தில் tap-sivakumarவகுப்பில் படிக்கும் மாணவர்களை விட இந்த சிறுவன் சிறப்பாக பாடுவதைக் கவனித்த சங்கீத வித்வான், அவனுக்கும் சேர்த்து இலவசமாக சங்கீதம் கற்றுத் தருகின்றார் வித்வான். கால ஓட்டத்தில் ஒரு தமிழ்ப்பட இசையமைப்பாளரிடம் வேலைக்கு சேர்கின்றான் அந்த சிறுவன். இசையமைப்பாளரின் ஹார்மோனியப் பெட்டியைச் சுத்தம் செய்து தருவது போன்ற உதவிகளைச் செய்வதுதான் அவனது பணி. ஒருநாள் ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கு சரியான இசைக்கோர்வை (டியூன்) கிடைக்காமல் இரவுவரை சிரமப்படும் இசையமைப்பாளர் உறங்கிவிட, ஆர்மோனியப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு அந்த பாட்டுக்கு டியூன் போடுகின்றான் பையன். மறுநாள், காலை எழுந்து பார்த்த இசையமைப்பாளர் “யாருடா எனது ஆர்மோனியப் பெட்டியை இடம் மாற்றி வைத்தது” என சத்தம் போடுகின்றார். வீட்டில் இருந்தவர்கள் சிறுவன்தான் நேற்றிரவு டியூன் போட்டான் எனக் கூற, ஏன் என் ஆர்மோனியப் பெட்டியைத் தொட்டாய் எனத் திட்டிக்கொண்டே, “சரி என்ன டியூன் போட்டாய் காட்டு” என்கின்றார். சிறுவன் போட்டுக்காட்டிய டியூனைப் பார்த்து அசந்துபோன இசையமைப்பாளர், அந்த டியூனைத் தனது பெயரில் அப்படியே படத்தில் பயன்படுத்திக் கொள்கின்றார். பின்னர் மேலும் மூன்று பாடல்களுக்கு டியூன் போடச் சொல்லி, நீதான் டியூன் போட்டாய் எனச் சொல்லக் கூடாது என்ற உத்தரவாதத்தை அந்த சிறுவனிடம் வாங்கிக் கொள்கின்றார். அந்தப் பையன்தான் எம்.எஸ்.விஸ்வநாதன்”

-இவ்வாறு நடிகர் சிவகுமார் கலங்கிய கண்களுடன் கூறி முடித்தார்.

(எம்.எஸ்.விஸ்வநாதன் அவ்வாறு உதவியாளராக வேலை பார்த்த இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என தகவல் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன) 

கருவில் திரு அமைந்தவர் எம்எஸ்வி

MS VISVANATHAN-TM SOUNDERARAJAN

நூற்றுக்கணக்கான அமரகாவியப் பாடல்களை இணைந்து வழங்கி எம்எஸ்வியும்-டிஎம் சௌந்தரராஜனும் – இசைக் குழுவுடன் 

கருவில் திரு அமைந்த எம்எஸ்வியின் மேதாவித்தனத்தை சுருக்கமாக எடுத்துக் காட்டியது சிவகுமார் மேலே கூறிய அஞ்சலி வாசகங்கள்.

மேதாவிகள் பிறக்கின்றார்களா அல்லது உருவாக்கப்படுகின்றார்களா என காலந்தோறும் நடந்து வரும் விவாதத்தின் இன்னொரு உதாரணம் எம்எஸ்வி என அன்புடன் பின்னாளில் அழைக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்.

பிறவியிலேயே அபார இசைஞானம் பெற்றிருந்த எம்ஸ்வி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நான்கு ஐந்து தலைமுறைகளாக தனது இசைப் பாடல்களால் தமிழர் இல்லங்களையும்-உள்ளங்களையும் ஆக்கிரமித்தவர்.

இனிவரும் எத்தனையோ தலைமுறைகளும் அவரது பாடல்களைக் கொண்டாடும்- கேட்டு மகிழும் – அவரது புகழ்பாடும் – என்பதில் ஐயமில்லை.

MS Visvanathan-Kannadasan

சாகாவரம் பெற்ற பாடல்களை வழங்கிய எம்எஸ்வி-கண்ணதாசன் 

“தமிழர் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பொருத்தமாக எனது பாடல் ஏதாவது ஒன்று இருக்கும்” என்பது கவிஞர் கண்ணதாசனின் வாக்கு.

அந்த வாக்கு எம்எஸ்விக்கும் கச்சிதமாகப் பொருந்தும். எந்தத் தருணத்திலும் நாம் கேட்டு மகிழும் பாடல்களில் ஏதாவது ஒன்று எம்எஸ்வியின் பாடலாகத்தான் இருக்கும்.

எம்எஸ்விக்கு தகுந்த அங்கீகாரம் வாழ்நாளில் கிடைத்ததா?

அவரது மறைவுக்குப் பின்னர் தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடந்த விவாத மேடையில், எம்எஸ்விக்கு இந்திய அரசாங்கம் “பத்ம” பட்டங்கள் போன்று அங்கீகாரம் எதுவும் அளிக்கவில்லை, அவரை நாமும் கொண்டாடத் தவறி விட்டோம் என்றும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆதங்கப்பட்டார்.

உண்மைதான்! இருப்பினும், அவரது பாடல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும், மற்ற இசையமைப்பாளர்கள் இன்று வரை அவரது வழியில்தான் மெல்லிசைப் பாடல்களை உருவாக்குகின்றோம் என்று போற்றிப் புகழ்வதும்தான் அவருக்குக் கிடைத்திருக்கும் காலத்தால் அழியாத அங்கீகாரங்களாகக் கொள்ளலாம்.

MS VISWANATHAN-VAALI-

மறைந்த கவிஞர் வாலியுடன்

எம்எஸ்வியின் பணிவுக்கும், அடக்கத்திற்கும் பல உதாரண சம்பவங்களைச் சொல்வார்கள். அவரது பேச்சிலே, எப்போதும் இத்தனை அற்புதப் பாடல்களை உருவாக்கியவன் என்ற மமதையோ, பெருமையோ, அகங்காரத்தையோ அவர் தனது வார்த்தைகளில் காட்டியதில்லை.

பாடலாசிரியர்களுக்கு மரியாதை தந்த இசையமைப்பாளர்

தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் இடையில் எப்போதும் இருந்துவரும் முட்டல் மோதல்கள் பிரசித்தம்.

ஆனால், தனது பாடல்களின் பெருமைகளையெல்லாம் அந்தப் பாடல்களை எழுதிய கவிஞர்களுக்கே தயங்காமல், சமர்ப்பித்தவர் எம்எஸ்வி.

MS Visvanathan-Ilayaraja

இளவயது இளையராஜாவுடன்….

எந்த நேரத்தில் எங்கு பேட்டி கொடுத்தாலும், கண்ணதாசனைப் பற்றி கலங்கிய கண்களுடன் அவர் பேசுவதைக் காணலாம். தனது பாடல்களில் கவிஞர் வார்த்துத் தந்த வார்த்தைகள்தான் தனது பாடல்கள் புகழ்பெற்றதற்குக் காரணம் என்று எப்போதும் தயங்காமல் கூறுவார்.

கவிஞர் வாலிக்கும், மற்ற பல கவிஞர்களுக்கும் அவர் அவ்வாறே புகழ் மகுடம் சூட்டி, அவர்களை முன்னிலைப்படுத்தி, தனது இசைத் திறமையை மட்டுப் படுத்தியே பேசுவார். அவரது இந்தத் தன்னடக்கத்தைப் பல பேட்டிகளில் வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை  முதல் சந்திப்பில் புறக்கணித்ததையும், பின்னர் அவரது திறமை கண்டு, அதுமுதல் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை என்பதை தனது குணாதிசயமாகவே மாற்றிக் கொண்டதையும் அவர் பல தருணங்களில் கூறியிருக்கின்றார்.

மற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்-பாடியவர்

சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளர்களாக இருந்த அவரும் டி.கே.ராமமூர்த்தியும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத கானங்களை தமிழ்ப் படங்களில் உலவ விட்டபோது, இதற்குக் காரணம் இந்த இருவரில் யார் என்ற கேள்வி பலரையும் துளைத்தெடுத்தது.

கால ஓட்டத்தில் அந்த இரட்டையரில் எம்எஸ்விதான் தனது இசைத்திறமையால் தனித்து ஒளிர்ந்தார் – உயர்ந்தார் – என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை.

இருப்பினும் எப்போதும் – எங்கேயும் அவர் ராமமூர்த்தியை தரக் குறைவாகவோ, அவரது இசைத் திறனைக் குறைத்து மதிப்பிட்டோ வார்த்தைகளை உதிர்த்ததில்லை.

தனக்குப் பின்னர் தமிழ்ப்பட இசை பாரம்பரியத்தில் உதித்த இளம் இசையமைப்பாளர்களையும் அவர் வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார். அதோடு நில்லாமல், அனைவரிடமும் இணைந்து பணியாற்றினார். அவர்களின் பல படங்களில் பாட அழைத்தபோது தயங்காமல் பாடித் தந்தார்.

இளையராஜாவுடன் இணைந்து ஒரு சில படங்களுக்கு இசையமைத்தார்.

எம்எஸ்வியின் தனித்துவமான இசையைப் போலவே, அவரது இந்த தன்னடக்கமும், பணிவும் கலந்த குணாதிசயம்தான் கால ஓட்டத்தில் அவரை ஓர் உயர்ந்த மனிதராகக் காட்டியது எனலாம்!

அதேபோன்று, தனக்கு குருவாக அமைந்த இசையமைப்பாளர்களுக்கும் இறுதிவரை மரியாதை செலுத்தியவர் எம்எஸ்வி. அவரது மனிதாபிமான குணத்தை எடுத்துக் காட்டும் சம்பவங்களும் ஏராளம்.

“என்றென்றும் எம்எஸ்வி” என்பது ஒரு தமிழகத் தொலைக்காட்சி நிறுவனம் எம்ஸ்வியின் பாடல்கள் குறித்து அவருடன் நடத்திய தொடர் நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு வைத்த தலைப்பாகும்.

அவரது தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிக்கு “என்றென்றும் எம்எஸ்வி” எனப் பெயர் சூட்டியதுபோல், பொருத்தமாக, தமிழர்களின் வாழ்வில், தமிழ்ப் பாடல் இரசிகர்களின் மனங்களில் இன்றும், இனி என்றென்றும் எம்எஸ்வி வாழ்ந்து வருவார்!

-இரா.முத்தரசன்